தேடுதல்

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டி, கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆற்றிய சிறப்புத் திருப்பலியில், தென் கொரிய அரசுத்தலைவர் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டி, கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆற்றிய சிறப்புத் திருப்பலியில், தென் கொரிய அரசுத்தலைவர் 

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ சிறப்புத் திருப்பலி

பல ஆண்டுகளுக்குப் பின், அமைதி என்ற உண்மை உதயமாகியிருக்கும் கொரிய தீபகற்பத்தில், இந்த அமைதியின் முழு சக்தியும் பரவவேண்டும் – கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 17, இப்புதன் மாலை, 6 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ வேண்டி, ஆற்றிய சிறப்புத் திருப்பலியில், தென் கொரிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன் அவர்கள் பங்கேற்றார்.

இத்திருப்பலியில் மறையுரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், இயேசு தன் உயிர்ப்பிற்கு பின் "உங்களுக்கு சமாதானம்" (யோவான் 20:19) என்ற சொற்களால் சீடர்களுக்கு சமாதானத்தை கொடையாக வழங்கியதுபோல், பாடுகளை ஏற்பதற்கு முன்னர், இரவுணவு அருந்திய வேளையிலும், "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்" (யோ. 14:27) என்ற சொற்களின் வழியே அமைதியை ஒரு கொடையாக வழங்கினார் என்று கூறினார்.

இயேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்ப்பையும் இணைக்கும் அமைதி என்ற கொடை, உண்மையான வாழ்வையும், முழுமையான மகிழ்வையும் தேடும் மனித உள்ளங்களுக்கு வழங்கப்படுகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின், அமைதி என்ற உண்மை உதயமாகியிருக்கும் கொரிய தீபகற்பத்தில், இந்த அமைதியின் முழு சக்தியும் பரவவேண்டும் என்ற வேண்டுதலுடன் இங்கு கூடியிருக்கிறோம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.

நீதி, ஒருங்கிணைதல், மனிதரின் மாண்பை, குறிப்பாக, வலுவிழந்தோரின் மாண்பை வளர்த்தல் ஆகிய அடித்தளங்களின் மீது நாம் எடுக்கும் ஒவ்வொருநாள் முடிவுகள், உண்மையான அமைதியைக் கொணரும் என்பதை நல்மனம் கொண்ட ஒவ்வொருவரும் உணர்த்திருக்கின்றனர் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

உலகம் காட்டும் போலியான அமைதியில், சிலுவை என்ற உண்மை மறைக்கப்படுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை, தன் மறையுரையில் நினைவுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், துன்பங்கள் நடுவிலும் ஆழ்மனதில் உணரப்படும் அமைதியே நீடித்த, உண்மையான மகிழ்வு என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2018, 12:27