செய்தியாளர்களிடம் பேசும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் செய்தியாளர்களிடம் பேசும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் 

வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள திருத்தந்தை தயங்கமாட்டார்

வட கொரியாவுக்கு திருத்தந்தை செல்வதன் விளைவாக, அப்பகுதியில், அணு ஆயுதங்களை நீக்கவும், கொரிய தீபகற்பத்தில் அமைதியைக் கொணரவும் முடியும் என்றால், திருத்தந்தை, அப்பயணத்தை மேற்கொள்ள, சிறிதளவும் தயங்கமாட்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வட கொரியா நாட்டுக்குச் செல்வதற்கு, தீவிரமான தயாரிப்புகள் தேவை என்றும், இதற்கு, வட கொரிய அரசுத் தலைவர் அனுப்பியுள்ள அழைப்பு மடல் ஓர் ஆரம்பம் மட்டுமே என்றும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 18 இவ்வியாழனன்று தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், வட கொரிய அரசுத்தலைவர் கிம் ஜாங்-உன் அவர்கள் அனுப்பிய அழைப்பு மடலை, திருத்தந்தையிடம் அளித்தார்.

இந்த மடலைத் தொடர்ந்து, திருத்தந்தை, வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்வாரா என்று, செய்தியாளர்கள், திருப்பீடச் செயலரிடம், இவ்வியாழன் மாலையில் கேள்வி எழுப்பிய வேளையில், இந்தப் பயணம் குறித்த திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் பதிலளித்தார்.

வட கொரியாவுக்கு திருத்தந்தை செல்வதன் விளைவாக, அப்பகுதியில், அணு ஆயுதங்களை நீக்கவும், கொரிய தீபகற்பத்தில் அமைதியைக் கொணரவும் முடியும் என்றால், திருத்தந்தை, அப்பயணத்தை மேற்கொள்ள, சிறிதளவும் தயங்கமாட்டார் என்று, கர்தினால் பரோலின் அவர்கள் உறுதி அளித்தார்.

வட கொரிய அரசுத்தலைவர் அனுப்பியுள்ள அழைப்பு ஓர் ஆரம்பம் மட்டுமே என்றும், இதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு, அதிகாரப்பூர்வமான அழைப்பை விடுக்கும் வேளையில், இப்பயணம் குறித்த திட்டங்களும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2018, 15:28