அருளாளர்களான திருத்தந்தை 6ம் பவுல், மற்றும், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அருளாளர்களான திருத்தந்தை 6ம் பவுல், மற்றும், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ 

புனிதர் பட்ட நிகழ்வுகள் குறித்த செய்தியாளர்கள் கூட்டம்

புனித பேதுருவின் வழித்தோன்றல்கள் என்ற வரிசையில், ஐந்து திருத்தந்தையருடன் தொடர்பு கொண்டிருந்த திருத்தந்தை 6ம் பவுல், ஒரு முக்கிய இணைப்பாக இருந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் தனக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர்களோடும், தனக்குப் பின் திருத்தந்தையராகப் பொறுப்பேற்றவர்களோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால், புனித பேதுருவின் வழித்தோன்றல்கள் என்ற வரிசையில் ஒரு முக்கிய இணைப்பாக இருந்தார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 14, இஞ்ஞாயிறன்று வத்திக்கானில் நடைபெறவிருக்கும் புனித பட்ட நிகழ்வைக் குறித்து, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஜியோவான்னி ஆஞ்செலோ பெச்சு அவர்கள், அக்டோபர் 11, இவ்வியாழன் மாலை செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

ஐந்து திருத்தந்தையருடன் தொடர்பு கொண்டிருந்த திருத்தந்தை 6ம் பவுல் 

கர்தினால் ஜியோவான்னி பத்திஸ்தா மொந்தீனி அவர்கள், ஆறாம் பவுல் என்ற பெயருடன், திருத்தந்தையாகப் பொறுப்பேற்பதற்கு முன், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தவர், மற்றும், புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர் என்றும், தன் தலைமைப்பணியின் காலத்தில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அடுத்து வந்த திருத்த்தந்தையரான முதலாம் ஜான்பால், இரண்டாம் ஜான்பால் மற்றும் 16ம் பெனடிக்ட் ஆகிய மூவருக்கும் கர்தினால் பொறுப்பை வழங்கியவர் என்றும் கூறிய கர்தினால் பெச்சு அவர்கள், இவ்வகையில், அவர் ஒரு முக்கிய பிணைப்பாக விளங்கினார் என்று குறிப்பிட்டார்.

திருஅவையின் கண்ணோட்டத்தை விரிவாக்கியவர்

புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால் துவக்கப்பட்ட 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தை, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், நிறைவுக்குக் கொணர்ந்ததோடு, திருஅவையில் உருவான பல மாற்றங்களை அவர் துணிவுடன் துவக்கி வைத்தார் என்று கூறிய கர்தினால் பெச்சு அவர்கள், திருப்பீட தலைமைப்பணியை பன்னாட்டளவில் விரிவாக்கும் ஒரு முயற்சியாக, அவர் ஆயர்கள் மாமன்றத்தை உருவாக்கினார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இரு உலகப் போர்களையும், பாசிசம், நாசிசம், கம்யூனிசம் ஆகிய கொள்கைகளின் தாக்கங்களையும், தன் சொந்த வாழ்வில் உணர்ந்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், மனித உயிருக்கு வழங்கப்படவேண்டிய மாண்பை தன் உரைகளிலும், மடல்களிலும் வலியுறுத்தினார் என்று கர்தினால் பெச்சு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏனைய ஆறு புனிதர்கள்

அக்டோபர் 14, இஞ்ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் இரு மறைமாவட்ட அருள்பணியாளர்கள், பிரான்செஸ்க்கோ ஸ்பிநெல்லி, வின்சென்சோ ரொமானோ, இரு அருள் சகோதரிகள் மரிய கத்தரீனா கஸ்பார், நசாரியா இஞ்ஞாசியா மற்றும் இளம் பொதுநிலையினரான நுன்சியோ சுல்ப்ரிசியோ ஆகிய ஐவரைக் குறித்த விவரங்களையும், கர்தினால் பெச்சு அவர்கள் செய்தியாளர்களிடம் வழங்கினார்.

வறியோரின் குரலாக ஒலித்த பேராயர் ரொமேரோ

இதற்கிடையே, இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட, சான் சால்வதோர் துணை ஆயர், கர்தினால் கிரகோரியோ ரோசா சாவேஸ் அவர்கள், அக்டோபர் 14ம் தேதி புனிதராக உயர்த்தப்படவிருக்கும் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களைக் குறித்த விவரங்களை, குறிப்பாக, வறியோரின் குரலாக ஒலித்த பேராயர் ரொமேரோ அவர்கள் ஆற்றிய பணிகளைப் பற்றி செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2018, 15:41