இனவெறிக்கு எதிரான போராட்டம் இனவெறிக்கு எதிரான போராட்டம் 

"இனவெறியையும், இனப்பாகுபாடுகளையும் ஒழித்தல்"

வலைத்தளங்கள் வழியே பெருகிவரும் 'வெறுப்புப் பேச்சையும்' 'வெறுப்பு குற்றங்களையும்' அரசுகள் கண்காணித்து, அவற்றை முற்றிலும் தடுக்கும் வழிகளை விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதரின் அடிப்படை மாண்பைக் குலைக்கும், இனவெறி, இனத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகள், வேற்று இனத்தவர் மீது அச்சம், அதனால் உருவாகும் சகிப்பற்ற தன்மை ஆகிய அனைத்து தீமைகளையும், திருப்பீடம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், "இனவெறியையும், இனப்பாகுபாடுகளையும் ஒழித்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், அக்டோபர் 30ம் தேதி உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

மனித சமுதாயம், பல வழிகளிலும் உலகமயமாகி வந்தாலும், சந்தேகம், அச்சம், மற்றும், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகள் நம்மிடையே வளர்ந்துவருவதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்திய கவலையை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய ஆபத்தானச் சூழலில், நாம் அக்கறையின்றி இருப்பதை தவிர்த்து, ஒவ்வொரு மனிதரையும் மாண்புடன் நடத்தும் வழிகளை உறுதி செய்யும் பணிகளில் இணைந்துவரவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் அழைப்பு விடுத்தார்.

கண்ணுக்குக் கண் என்பதை வலியுறுத்திவரும் வன்முறைப் போக்குகளால் எவ்வித தீர்வும் கிடைக்காது என்பதை உணர்ந்து, ஒப்புரவு, உரையாடல் ஆகிய வழிகளில் தீர்வுகளை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் வலியுறுத்தினார்.

வலைத்தளங்கள் வழியே பெருகிவரும் 'வெறுப்புப் பேச்சையும்' 'வெறுப்பு குற்றங்களையும்' அரசுகள் கண்காணித்து, அவற்றை முற்றிலும் தடுக்கும் வழிகளை விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2018, 15:12