தேடுதல்

பேராயர் காலகர் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுதல் - கோப்புப் படம் பேராயர் காலகர் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுதல் - கோப்புப் படம் 

உலகில், பத்தில் ஒரு குழந்தை - தொழிலாளர்

மனித உரிமைகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 70 ஆண்டுகள் கடந்தும், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன‌ - ஐ.நா.வில் பேராயர் காலகர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலகில், சுதந்திரம், நீதி, மற்றும், அமைதி எனும் அடிப்படைகளில் ஊன்றப்பட்டுள்ள மனித குடும்ப அங்கத்தினர்களின் மாண்பும் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா. அவையில் அழைப்பு விடுத்தார், பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

மனித உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70வது ஆண்டையொட்டி ஐ.நா.வில் இடம்பெறும் ஐ.நா. பொது அவையின் 73வது தொடரில் திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் காலகர் அவர்கள், வழங்கிய உரையில் இவ்வழைப்பை முன்வைத்தார்.

 கடந்த 70 ஆண்டுகளில், மனித உரிமை நிலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளபோதிலும், இன்னும் 10 பேரில் ஒரு சிறார், தொழிலாளராக இருப்பதும், சிறையிலிருப்போருள் மூன்றுக்கு ஒருவர், விசாரண ஏதுமின்றி வைக்கப்பட்டுள்ளதும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுள் 29 விழுக்காட்டினர் பிறப்பைப் பதிவுச் செய்யாமல் இருப்பதும், 15 வயதிற்குட்பட்ட 25 கோடி பெண் குழந்தைகள் திருமண வாழ்வில் தள்ளப்பட்டுள்ளதும் கவலை தருவதாக உள்ளது என்றார்.

அடிமைத் தொழில் ஒழிக்கப்பட சட்டங்கள் இருக்கின்ற போதிலும், இன்றைய நவீன உலகில், எண்ணற்றோர் அடிமைகளாக வாழ்வதையும் பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில் புலம்பெயர்ந்தோரும், குடியேற்றதாரர்களும் கடத்தப்படும் நிலை, மோதல்கள், பயங்கரவாதம் போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை, குடும்பம், பெண்கள், குழந்தைகளின் உரிமைகளும் மாண்பும், ஒன்றிணைந்த வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார், திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2018, 17:03