ஐ.நா. தலைமையக கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா ஐ.நா. தலைமையக கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா 

பெண்கள் முன்னேற்றத்தில் அருள்சகோதரிகளின் பங்களிப்பு

பெண்கள் முன்னேற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வந்தாலும், எக்காலத்தையும் விட தற்போது அடிமை நிலைகள் அதிகமாக உள்ளன‌

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிறுமிகள் உட்பட, பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள், குறிப்பாக, அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள், பெண்கள் நுகர்வுப் பொருள்களாக கடத்தப்படுதல், மற்றும், நவீன அடிமை முறைகள் ஆகியவை குறித்து, ஐ.நா. அவைக் கூட்டத்தில் உரையாற்றினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

ஐ.நா. தலைமையக கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா அவர்கள், பெண்கள் முன்னேற்றம் குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது, இன்றைய காலத்தில் எக்காலத்தையும் விட அதிகமானோர் அடிமை நிலையில் வாழ்கின்றனர் என்றும், பெண்களை வியாபாரப் பொருள்களாக நடத்துவது, மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை எடுத்துரைத்தார்.

பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, பெண்களால் நிறுவப்பட்டுள்ள, அடிமை எதிர்ப்பு இயக்கங்கள் பெருகியுள்ளதை பாராட்டிய பேராயர் அவுசா அவர்கள், இத்தகைய இயக்கங்களில், கத்தோலிக்க அருட்சகோதரிகளின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் குறித்து எடுத்துரைத்தார்.

இன்றைய உலகில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தேசிய பாராளுமன்ற அவைகளில் அங்கத்தினர்களாக இருப்பது குறித்தும் மகிழ்ச்சியை வெளியிட்ட பேராயர் அவுசா அவர்கள், பயன்படுத்தி, தூக்கி எறியும் கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் தன் கருத்துக்களை முன்வத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2018, 16:57