தேடுதல்

ஐ.நா.அவை தலைமையகத்தில் நடைபெறும் பொது அமர்வு ஐ.நா.அவை தலைமையகத்தில் நடைபெறும் பொது அமர்வு 

முன்னேற்றத்தின் மையமாக இருக்கவேண்டி.ய முழு மனித மாண்பு

இலாபம் ஒன்றையே இலக்காக கொண்டு உருவாக்கப்படும் முன்னேற்றங்கள், மனித சமுதாயத்தையும், சுற்றுச்சூழலையும் அழிவுக்கு இட்டுச்செல்லும் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2030ம் ஆண்டுக்குள் நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை அடையும் முயற்சியாக, பல்வேறு நாடுகளும், ஐ.நா. அவை போன்ற பன்னாட்டு அமைப்புகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை, திருப்பீடம் நம்பிக்கையோடு பின்பற்றி வருகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் உரையாற்றினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாகப் பங்கேற்று வரும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், நடைபெற்றுவரும் 73வது அமர்வின் ஒரு பகுதியாக, நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை மையப்படுத்தி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், அக்டோபர் 16ம் தேதி, இச்செவ்வாயன்று வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

முன்னேற்றம் என்பது, பொருளாதாரம், சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல் என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்டிருக்கவேண்டும், மற்றும், இந்த மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

முன்னேற்றத்தின் மையமாக முழு மனித மாண்பு வலியுறுத்தப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், இதற்கு மாறாக, இலாபம் ஒன்றையே இலக்காக கொண்டு உருவாக்கப்படும் முன்னேற்றங்கள் மனித சமுதாயத்தையும், சுற்றுச்சூழலையும் அழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு முக்கிய கருவியாக சுற்றுலாத் துறைகளின் முன்னேற்றம் கருதப்படுகின்றன என்பதை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், செல்வம் மிகுந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க, வறுமைப்பட்ட நாடுகள், தங்கள் நாட்டு மக்களின் நலன்களை பெருமளவு அழித்து வருகின்றன என்பதை கவலையோடு எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2018, 17:01