தேடுதல்

Vatican News
எருசலேமில், யூத, இஸ்லாமிய நண்பர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் எருசலேமில், யூத, இஸ்லாமிய நண்பர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

பாலஸ்தீனம்-இஸ்ரேல் இரு நாடுகள் குறித்து திருப்பீடம்

ஐ.நா. அவையால் குறித்துக் காட்டப்பட்டுள்ள எல்லைக் கோடுகளை மதித்து, பாலஸ்தீனம், இஸ்ரேல், ஆகிய இரு நாடுகளும், அருகருகே சமாதானத்துடன் வாழ்வதற்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் தேவை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீனம் என்ற பகுதி, பாலஸ்தீனம், இஸ்ரேல் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட காலத்திலிருந்து, அவ்விரண்டும், இரு நாடுகளாக இயங்கவேண்டும் என்ற முடிவிலிருந்து திருஅவை சிறிதும் மாறவில்லை என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.தலைமையகத்தில் உரை வழங்கினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 18, இவ்வியாழனன்று, "பாலஸ்தீனா என்ற கேள்வி உட்பட, மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலவரம்" என்ற தலைப்பில் நிகழ்ந்த கூட்டத்தில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

ஐ.நா. பொது அவையில், 1947ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 181வது தீர்மானத்தின்படி, பாலஸ்தீனா, இஸ்ரேல் இரண்டும் இரு வேறு நாடுகளாக திகழவேண்டும் என்று கூறப்பட்டதை, திருப்பீடம், துவக்கத்திலிருந்து ஆதரித்து வந்துள்ளது என்பதையும், இரு நாடுகள் என்ற தீர்வு மட்டுமே, இப்பகுதியில், அமைதியைக் கொணரும் என்பதையும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. அவை நிறைவேற்றியுள்ள இந்த ஒப்பந்தத்தை நோக்கி மக்களை வழிநடத்துவதற்குப் பதிலாக, இவ்விரு அரசுகளும், ஒருவரை ஒருவர் தூண்டிவிடும் வண்ணம் பேசி வருவதும், மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்குவதும் கண்டனத்திற்குரியன என்று பேராயர் அவுசா அவர்கள் குறிப்பிட்டார்.

எருசலேம் நகரம், கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களுக்கும், பாலஸ்தீனம், இஸ்ரேல் என்ற இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நகரமாக விளங்கவேண்டுமே தவிர, ஒரு சில தனிப்பட்ட தலைவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு, அந்நகரத்தின் பொதுத்தன்மை மாற்றப்படக்கூடாது என்பதை, திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

பாலஸ்தீன மக்கள், குறிப்பாக, புலம்பெயர்ந்த பாலஸ்தீன மக்களும், அவர்களுக்கு உதவிகள் செய்யும் ஐ.நா. நிறுவனமும், ஏனைய பிறரன்பு அமைப்புக்களும், சந்தித்து வரும் எதிர்ப்புச் சூழல்கள், திருப்பீடத்திற்கு மிகுந்த கவலையைத் தருகிறது என்று பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. அவையால் குறித்துக் காட்டப்பட்டுள்ள எல்லைக் கோடுகளை மதித்து, பாலஸ்தீனம், இஸ்ரேல், ஆகிய இரு நாடுகளும், அருகருகே சமாதானத்துடன் வாழ்வதற்கு அனைத்து நாடுகளின் ஆதரவும் தேவை என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்.

19 October 2018, 15:44