எத்தியோப்பியாவின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் எத்தியோப்பியாவின் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் 

"வாழ்வு, மென்மை, அமைதி, ஆகிய கொடைகளை வழங்கும் பெண்கள்"

"மென்மைத்தனத்தின் புரட்சி"யை முன்னின்று நடத்தக்கூடியவர்கள் பெண்களே என்பதை, கத்தோலிக்கத் திருஅவை உணர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளது - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகிற்கு இன்று மிகவும் தேவையான "மென்மைத்தனத்தின் புரட்சி"யை முன்னின்று நடத்தக்கூடியவர்கள் பெண்களே என்பதை, கத்தோலிக்கத் திருஅவை உணர்ந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.  அவையில் உரையாற்றினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், "பெண்கள், அமைதி மற்றும் நீதி" என்ற தலைப்பில், அக்டோபர் 25, இவ்வியாழனன்று, நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

"வாழ்வு, மென்மை, அமைதி, மற்றும் மகிழ்வு என்ற கொடைகள் அனைத்தையும் வழங்கும் பெரும் பேறு பெற்றவர்கள் பெண்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் மேற்கோளாகக் குறிப்பிட்டார்.

செவிமடுத்தல், வரவேற்றல், மற்றும் தன்னையே தாராளமாக வழங்குதல் என்ற அடிப்படை பண்புகள் பெண்களிடம் காணப்படுவதால், இவ்வுலகிற்குத் தேவையான உரையாடலுக்கு அவர்கள் பெரும் பங்களிக்க முடியும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

அன்பு ஒன்றே இவ்வுலகை வாழ்வதற்குரியதாக மாற்றக்கூடும் என்பதில் பெண்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதால், வாழ்வைப் பேணுதல், குறிப்பாக, வலுவிழந்தோரைப் பேணுதல் என்ற சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு உண்டு என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.

மோதல்களும், போர்களும் நிறைந்துள்ள இடங்களில், பெண்கள் மிகப் பெரும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதைக் குறித்து கவலை வெளியிட்ட பேராயர் அவுசா அவர்கள், பாலியல் கொடுமைகளை, போரின் கருவியாகப் பயன்படுத்துவதை, திருப்பீடம் மிக வன்மையாகக் கண்டனம் செய்கிறது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2018, 16:02