தேடுதல்

Vatican News
அணுசக்திக்கு எதிராக மக்களின் போராட்டம் அணுசக்திக்கு எதிராக மக்களின் போராட்டம்  (AFP or licensors)

அணு ஆயுத ஒழிப்பு, மிகப்பெரும் நன்னெறி சவால்

வறுமை ஒழிப்புக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதி ஆதாரங்களை அணு ஆயுத வளர்ச்சிக்காக அரசுகள் பயன்படுத்துகின்றன – ஐ.நா. அவையில் பேராயர் அவுசா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெரும் எண்ணிக்கையில் மக்களின் உயிரிழப்பையும், சுற்றுச்சூழல் அழிவையும், பட்டினி சாவுகளையும் உருவாக்கும் வல்லமை கொண்ட 14,000த்திற்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இவ்வுலகில் இருப்பது, நாம் வாழும் காலத்தின் மிகப்பெரும் நன்னெறி சவாலாக உள்ளது என்று, ஐ.நா. அவை கூட்டம் ஒன்றில், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் உரை வழங்கினார்.

நியூ யார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் அவுசா அவர்கள், நடைபெற்றுவரும் 73வது அமர்வின் ஒரு பகுதியாக, அணு ஆயுத ஒழிப்பு குறித்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

1945ம் ஆண்டு அணுசக்தி ஆய்வு நடைபெறுவதற்கு முன்னரே, 1943ம் ஆண்டு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், அணுசக்தியின் தவறான பயன்பாட்டைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார் என்று, தன் உரையில் கூறிய பேராயர் அவுசா அவர்கள், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களைத் தொடர்ந்து திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற 23ம் ஜான் அவர்கள், "உலகில் அமைதி" என்ற புகழ்மிக்க திருமடலை உருவாக்கியதையும் எடுத்துரைத்தார்.

அணு ஆயுத பயன்பாட்டிற்கு எதிராக, ஒவ்வொரு திருத்தந்தையும் தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டு வந்துள்ளனர் என்பதை, பேராயர் அவுசா அவர்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

பொய்யான ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும் அணு ஆயுதங்கள், நாடுகளிடையே நம்பிக்கையின்மை, இணக்கமற்ற நிலை ஆகியவற்றை உருவாக்குவதுடன், வறுமை ஒழிப்புக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதி ஆதாரங்களை அணு ஆயுத வளர்ச்சிக்காக அரசுகள் பயன்படுத்துகின்றன என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

அணு ஆயுதக் களைவு குறித்த ஒப்பந்தங்கள் சரியான முறையில் மதிக்கப்படுவதில்லை என்பதையும் தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், சில நாடுகளில், அணு ஆயுதங்களை மேலும் சக்தி வாய்ந்ததாக, கூடுதல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, உலக அளவில் நாடுகளிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுவது அவசியம் என்பதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

23 October 2018, 17:20