தேடுதல்

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

ஆயுதங்களின் பயன்பாட்டால், 15 நிமிடங்களுக்கு ஒரு கொலை

பணம், குறிப்பாக, அப்பாவியான வறியோரின் இரத்தத்தில் தோய்ந்த பணம், இவ்வுலகின் வன்முறைகள் அனைத்திற்கும் காரணம் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக, சிறிதும், பெரிதுமாக, உலகெங்கும் நடைபெற்றுவரும் ஆயுத விற்பனைகளும், ஆயுதக் கடத்தல்களும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதை திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், அக்டோபர் 30, இச்செவ்வாயன்று ஐ.நா. அவையில் வழங்கிய மற்றுமொரு உரையில் கூறினார்.

"சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனைகளுக்கு எதிரான நடவடிக்கைகள்" என்ற தலைப்பில், ஐ.நா. அவையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், தற்போது உலகெங்கும் பரவியுள்ள இத்தகைய ஆயுதங்களை திரட்டி, அவற்றை அழிப்பதும் அரசுகளின் முக்கியமான கடமை என்பதை வலியுறுத்தினார்.

சட்டத்திற்குப் புறம்பாக பரவிவரும் இந்த ஆயுதங்களின் பயன்பாட்டால், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஓர் உயிர் கொல்லப்படுகிறது என்றும், இந்த ஆயுதங்களை நிறுத்துவதற்கு அரசுகளின் செயல்பாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன என்றும் ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறிய சொற்களை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் மேற்கோளாகக் கூறினார்.

ஆயுதம் தாங்கி போரிடும் அனைத்து குழுக்களும், மனித உரிமை மீறல்களில் அடிக்கடி ஈடுபட்டுள்ளனர் என்றும், மோதல்கள் நிகழும் பகுதிகளில், மனிதாபிமான உதவிகள் சென்றடைவதையும் இக்குழுக்கள் தடுக்கின்றன என்றும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பான, அமைதியான உலகை உருவாக்க, வறுமை ஒழிப்பு ஒரு முக்கிய போராட்டம் என்று புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் கூறிய எண்ணங்களையும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

பணம், குறிப்பாக, அப்பாவியான வறியோரின் இரத்தத்தில் தோய்ந்த பணம், இவ்வுலகின் வன்முறைகள் அனைத்திற்கும் காரணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய சொற்களையும், பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2018, 15:06