தேடுதல்

Vatican News
பூர்வீக குடிமக்கள் உடையில் சிறார் பூர்வீக குடிமக்கள் உடையில் சிறார்  (ANSA)

பூர்வீக குடிமக்களின் நலனில் ஐ.நா. சிறப்பு அக்கறை

பழங்குடியின மக்களின் கலாச்சார மதிப்பீடுகள், உரிமைகள், பாரம்பரியங்கள், அவர்களே முடிவெடுக்கும் உரிமை போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த 20 ஆண்டுகளில் ஐ.நா. நிறுவனம், பழங்குடியின மக்களின் வாழ்வு முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளதாக பாராட்டுதல்களை வெளியிட்டார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், பழங்குடியின மக்களின் கலாச்சார மதிப்பீடுகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றிலும், அவர்களுக்கேயுரிய பாரம்பரியம், மற்றும், மனித உரிமைகளை மதிப்பதிலும், அவர்களுக்குரிய கலாச்சார-சமூக முன்னேற்றத் திட்டங்களில் அவர்களே முடிவெடுக்க வாய்ப்புக்களை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்றார்.

இத்தகைய முன்னேற்றங்கள் மத்தியிலும், பழங்குடியின மக்களின் சுற்றுச்சூழல், கலாச்சாரம், ஆன்மீகப் பாரம்பரியம் ஆகியவை அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன என்பதையும் குறிப்பிட்டார் பேராயர்.

பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் வாழும் சுற்றுச் சூழலுக்கு மதிப்பளிக்காத வகையில், முன்னேற்றம் என்ற பெயரில் பொருளாதார மற்றும் கொள்கை ரீதி காலனி ஆதிக்கங்கள் புகுத்தப்படுகின்றன என்ற கவலையையும் வெளியிட்டார், ஐ.நா. அவை கூட்டங்களில் பங்கேற்கும் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் அவுசா.

13 October 2018, 17:10