ஐ.நா. தலைமையகக் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. தலைமையகக் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

மனிதரின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதே முன்னேற்றம்

சக்திமிகுந்தோருக்குச் சாதகமான பல்வேறு கருத்தியல்களும் உலக மயமாக்கப்பட்டு, அவை, சக்தியற்ற வறியோர் மீது திணிக்கப்படுவது, முன்னேற்றம் அல்ல - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித முன்னேற்றம் என்பது, வெறும் பொருள் சார்ந்த தேவைகளை நிறைவு செய்வது மட்டுமல்ல, மாறாக, முழு மனிதரின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்வதில் அடங்கியுள்ளது என்பதே, திருப்பீடத்தின் கண்ணோட்டம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் உரையாற்றினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், முழுமையான முன்னேற்றம், மற்றும், பொதுவான நன்மை என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று நடைபெற்ற கூட்டத்தில், இவ்வாறு உரை வழங்கினார்.

வறுமையை ஒழிக்க மேற்கொள்ளப்படும் போராட்டமும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை நோக்கிய முயற்சிகளும், மனித மாண்பையும், அடிப்படை மனித உரிமைகளையும் அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

'உலகமயமாக்கப்பட்ட கருத்தியல் திணிப்பு' நடைபெற்றுவருவதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. அவையில் வழங்கிய உரையிலும், இன்னும் பல்வேறு உரைகளிலும் கூறி வந்துள்ளதை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டி, செல்வந்தர்களுக்கு சாதகமாக அமைந்துள்ள முன்னேற்றம் என்ற எண்ணமும், இதேபோல், உலகமயமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சக்திமிகுந்தோருக்குச் சாதகமான பல்வேறு கருத்தியல்களும் உலக மயமாக்கப்பட்டு, அவை, சக்தியற்ற வறியோர் மீது திணிக்கப்படுவது, முன்னேற்றம் அல்ல என்றும், அத்தகையப் போக்கு, அநீதியானது என்றும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2018, 15:24