ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

குற்றங்களையும், போதைப்போருள்களையும் தடுக்க...

குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல், தகுந்த கல்வி வழங்குதல், இளையோரின் எதிர்கால அச்சங்களை அகற்றுதல் ஆகிய முயற்சிகளே, போதைப்பொருள் பயன்பாட்டை அகற்றும் வழிகள் - திருப்பீடம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தீவிரவாதப் போக்குகளும், கட்டமைக்கப்பட்ட வழிகளில் நடத்தப்படும் குற்றங்களும் மனிதர்களின் மாண்பையும், பொதுநலனையும் வெகுவாக அச்சுறுத்தி வருகின்றன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவை கூட்டத்தில் கூறினார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், நடைபெற்றுவரும் 73வது அமர்வின் ஒரு கூட்டத்தில் பேசுகையில், இவ்வாறு கூறினார்.

குற்றங்களைத் தடுத்தல், மற்றும், பன்னாட்டு போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், மனிதகுலம் கண்டுபிடித்துள்ள தகவல் தொழில்நுட்பங்கள், பல்வேறு பயன்களை வழங்கும் அதே நேரம், தீவிரவாத முயற்சிகளுக்கும் அவை பெரிதும் துணைபோகின்றன என்று கவலை வெளியிட்டார்.

தகவல் தொழில்நுட்பங்களின் கட்டுப்பாடற்றப் பயன்பாட்டால், குடும்ப உறவுகள் சிதைந்துவரும் அதே வேளையில், இத்தொழில் நுட்பங்களின் மாய வலையில் சிக்கி, குழந்தைகள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் தவறான வழிகளில் அடிமையாகி வருவது ஆபத்தானது என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஒரு சில போதைப்பொருள்களை சட்டப்படி ஏற்றுக்கொள்வதால், போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கமுடியும் என்று ஒரு சில அரசுகள் கூறுவதை, திருப்பீடம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் திட்டவட்டமாகக் கூறினார்.

குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல், தகுந்த கல்வி வழங்குதல், எதிர்காலத்தைக் குறித்து இளையோர் கொண்டிருக்கும் அச்சங்களை அகற்றுதல் ஆகிய முயற்சிகளே போதைப்பொருள் பயன்பாட்டை அகற்றும் வழிகள் என்று, ஐ.நா.வின் திருப்பீட பிரதிநிதி, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2018, 15:54