தேடுதல்

போரால் பாதிக்கப்பட்ட சிரியா குழந்தைகள் போரால் பாதிக்கப்பட்ட சிரியா குழந்தைகள் 

சிரியா, ஈராக் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த கூட்டம்

உலகில் போர் இடம்பெறும் பகுதிகளில், 2018ல் கடும் பசியினால் 6 இலட்சம் சிறார் இறக்கக்கூடும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிரியா மற்றும் ஈராக்கில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடிகளைக் களைவதற்கு கடந்த ஆறு ஆண்டுகளாக, கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள் ஆற்றிவரும் நடவடிக்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, இவ்வாரத்தில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

உரோம் உர்பானியானம் பாப்பிறைப் பல்கலைகழகத்தில், செப்டம்பர் 13, இவ்வியாழனன்று தொடங்கும், இந்த இரண்டு நாள்கள் கூட்டத்தில், ஏறத்தாழ ஐம்பது கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள், சிரியாவிலும் ஈராக்கிலும் பணியாற்றும் ஆயர்கள், துறவற சபைகளின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொள்வார்கள் என, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

2018ல் பசியினால் 6 இலட்சம் சிறார் இறப்பு

உலகில் போர் இடம்பெறும் பகுதிகளில், இவ்வாண்டு இறுதிக்குள், கடும் பசிக்கொடுமையால், ஐந்து இலட்சத்துக்கு அதிகமான சிறார் இறக்கக்கூடும் என, Save the Children என்ற அமைப்பு எச்சரித்துள்ளது.

போர்கள் இடம்பெறும் மிகவும் ஆபத்தான பகுதிகளில் வாழ்கின்ற ஐந்து வயதுக்குட்பட்ட 45 இலட்சம் சிறார் உயிர்வாழத் தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டும் என்று கூறும் அந்த அமைப்பு, இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டிலிருந்து, ஏறத்தாழ இருபது விழுக்காடு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கின்றது.

போர் இடம்பெறும் பகுதிகளில், ஒவ்வொரு நாளும், ஐந்து வயதுக்குட்பட்ட 1,600 சிறார் அல்லது ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு சிறார் என்ற விகிதத்தில் இறக்கின்றனர் என்றும், Save the Children என்ற அமைப்பு கூறியுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2018, 15:14