தேடுதல்

திருத்தந்தையுடன் கர்தினால் லொரென்சோ பால்திசேரி திருத்தந்தையுடன் கர்தினால் லொரென்சோ பால்திசேரி 

ஆயர்கள் மாமன்றம் இறைமக்கள் பணியில்

இறைமக்கள் வழியாகப் பேசும் கிறிஸ்துவின் குரலை செவிமடுப்பதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டியவர்கள் ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

'Episcopalis communio' எனப்படும் திருத்தந்தையின் புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தை, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச்செயலர் கர்தினால் லொரென்சோ பால்திசேரி, அம்மாமன்றத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Fabio Fabene, இம்மாமன்ற ஆலோசகரும், கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழக பேராசிரியருமான தாரியோ வித்தாலி ஆகிய மூவரும் செய்தியாளர் கூட்டத்தில், செப்டம்பர் 18, இச்செவ்வாயன்று வெளியிட்டனர்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஆயர் பிரதிநிதிகள், போதகர்கள் மற்றும் சீடர்களாகவும் இருக்கின்றனர் என்றும், அவர்களின் மறைப்பணி கடமையில், இறைமக்கள் வழியாகப் பேசும் கிறிஸ்துவின் குரலுக்கு ஆயர்கள் செவிமடுப்பதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றம், இறைமக்களின் குரல்களைக் கேட்பதற்கு மிகவும் தனிப்பட்ட பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும், இந்த மாமன்றத்தின் செயல்பாடுகள், தலத்திருஅவைகளின் விசுவாசிகளை ஆலோசித்ததன் அடிப்படையில் நடைபெறுகின்றது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றம், திருத்தந்தையின் நேரடி தலைமையின்கீழ் நடைபெறுகின்றது என்றும், உலகளாவிய திருஅவையின் நன்மையை அடிப்படையாக வைத்து பொது உலக ஆயர்கள் மாமன்றமும், உலகளாவிய திருஅவையின் நன்மைக்காக, உடனடியாக கருத்தில் கொள்ளப்படவேண்டிய விவகாரங்கள் எழும்போது, அசாதாரண உலக ஆயர்கள் மாமன்றமும், தேவை ஏற்படும்பட்சத்தில், புவியியலில் ஒரு பெரிய அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கருத்தில் எடுக்கப்படவேண்டிய விவகாரங்கள் தொடர்பாக, சிறப்பு  உலக ஆயர்கள் மாமன்றமும் நடைபெறும் எனவும், கொள்கை விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

27 எண்களாக கொடுக்கப்பட்டுள்ள உலக ஆயர்கள் மாமன்ற அமைப்புமுறையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு இயல்பின் அடிப்படையிலும் இம்மன்றம் கூட்டப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2018, 16:34