தென்னாப்ரிக்காவில் குழாயிலிருந்து குடிநீர் பிடிக்கின்றனர் தென்னாப்ரிக்காவில் குழாயிலிருந்து குடிநீர் பிடிக்கின்றனர் 

அனைவருக்கும் தண்ணீர், சொல்லிருந்து செயல் தேவை

தண்ணீர் எல்லாருக்கும் கிடைக்கச் செய்வதிலும், நீர் வளங்கள் பங்கிடப்படுவதிலும் நாடுகளின் பங்கு மற்றும் கடமை பற்றி, FAO கூட்டத்தில் திருப்பீடம் சுட்டிக்காட்டியது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நீர் வளங்கள் பற்றாக்குறையால் துன்புறும் ஏழை மக்கள், இனிமேலும் காத்திருக்க இயலாது என்பதால், மனிதருக்கு அடிப்படைத் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு உலக சமுதாயம் ஆவன செய்யுமாறு, திருப்பீட பிரதிநிதி ஒருவர், ஐ.நா. கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டார்.   

FAO எனப்படும், ஐ.நா. வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில், FAO,’IFAD, PAM ஆகியவை, தண்ணீர் பற்றி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய, FAOவில், திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேரருள்திரு Fernando Chica Arellano அவர்கள், தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேசிக்கொண்டே இருக்காமல், அக்குறையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மனிதரின் தவிர்க்க இயலாத உரிமைகளில் ஒன்றாக தண்ணீரும் உள்ளது என்றும், உலகில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அல்லது நீர் வளங்கள் சட்டத்திற்குப் புறம்பே பயன்படுத்தப்படுவதால், மிகவும் துன்புறும் மக்கள் வாழ்கின்ற பகுதிகளின் நல்வாழ்வு கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார், பேரருள்திரு Arellano.

படைப்பைப் பாதுகாக்கும் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியையும் மேற்கோள்காட்டி உரையாற்றிய, பேரருள்திரு Arellano அவர்கள், நீர் மேலாண்மையில் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான சட்டங்கள் மதிக்கப்படுமாறும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2018, 15:30