ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் 

"உலகளாவிய குடிபெயர்தலும், வேற்றினத்தவர் மீது அச்சமும்"

தொழில்நுட்பத் தொடர்புகள் பெருகியிருந்தாலும், ஒருவர் ஒருவரை கண்டு அச்சம் கொள்ளும் அளவு, நம்மிடையே பிளவுகளும், பிரிவுகளும் உருவாகியுள்ளன - கர்தினால் டர்க்சன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நல்லதொரு வாழவைத் தேடி, ஆபத்தான சூழல்களை எதிர்கொள்ளும் மனிதர்களையும், குழந்தைகளையும் நாம் ஒவ்வொருநாளும், நேரடியாகவோ, ஊடகங்கள் வழியாகவோ சந்தித்து வருகிறோம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் வழங்கிய உரையில் கூறினார்.

"உலகெங்கும் நிகழும் குடிபெயர்தல் என்ற பின்னணியில், வேற்றினத்தவர் மீது அச்சம், மற்றும், இனவெறி" என்ற தலைப்பில், உரோம் நகரில், செப்டம்பர் 18, இச்செவ்வாயன்று துவங்கிய ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், தன் துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

கருத்தளவில் மட்டும் "உலகம் ஒரு கிராமம்"

"உலகம் ஒரு கிராமம்" என்ற கருத்து, ஊடகங்களில் பலமுறை பேசப்பட்டாலும், தொழில்நுட்பத்தின் வழியே நம் தொடர்புகள் பெருகியிருந்தாலும், ஒருவர் ஒருவரை கண்டு அச்சம் கொள்ளும் அளவு, நம்மிடையே பல்வேறு பிளவுகளும், பிரிவுகளும் உருவாகியுள்ளன என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் கவலையை வெளியிட்டார்.

மக்கள் நாடுவிட்டு, நாடு துரத்தப்பட்டு வரும் இன்றையச் சூழலில், அடுத்தவரை நாம் எவ்விதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறோம் என்பது, நம் அனைவரையும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியக் கேள்வி என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை, மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உலகப் பேரவை என்ற மூன்று அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கு, செப்டம்பர் 20, இவ்வியாழனன்று நிறைவு பெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2018, 14:55