தேடுதல்

நிலத்தடி கல்லறை ஒன்றில் காணப்படும் ஓவியம் நிலத்தடி கல்லறை ஒன்றில் காணப்படும் ஓவியம்  (© Pontificia commisione di archeologia sacra)

நிலத்தடி கல்லறைகளைக் காண சிறப்பு ஏற்பாடுகள்

உரோம் நகரிலுள்ள நிலத்தடி கல்லறைகளை, அக்டோபர் மாதம் 13ம் தேதி, கட்டணம் ஏதுமின்றி காணலாம் - திருப்பீட அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் அறிவிப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ மறையின் வேர்களாக, உரோம் நகரின் பல இடங்களில் அமைந்துள்ள நிலத்தடி கல்லறைகளை, அக்டோபர் மாதம் 13ம் தேதி  கட்டணம் ஏதுமின்றி காணலாம் என்று, திருப்பீட அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் தலைவர், கர்தினால் ஜியான்பிராங்கோ இரவாசி அவர்கள் அறிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தையும், அக்டோபர் 14, ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் புனிதர் பட்ட விழாவையும் முன்னிட்டு, உரோம் நகருக்கு வருகை தரும் திருப்பயணிகள், கிறிஸ்தவ வேர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, கர்தினால் இரவாசி அவர்கள் கூறினார்.

அக்டோபர் 14ம் தேதி புனிதராக உயர்த்தப்படும் அருளாளரான திருத்தந்தை 6ம் பால் அவர்கள், 1965ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி, புனித தோமித்தில்லா கல்லறையையொட்டி அமைந்துள்ள பசிலிக்காவில் மறையுரை வழங்கியபோது, "நமது கிறிஸ்தவ ஊற்றுக்களிலிருந்து பருகுவோம்" என்று விடுத்த அழைப்பை, கர்தினால் இரவாசி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இக்கல்லறைகளைக் காண வருவோருக்கு, பல்வேறு மொழிகளில் விளக்கங்கள் அளிக்கப்பதற்கென, நூற்றுக்கணக்கான இளையோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், கர்தினால் இரவாசி அவர்கள் அறிவித்தார்.

புனித கலிஸ்த்தோ, புனித பங்கிராஸ், புனித லொரென்சோ என்று பல புனிதர்களின் பெயரால் உரோம் நகரைச் சுற்றி பல்வேறு நிலத்தடி கல்லறைகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2018, 15:10