புனித வின்சென்ட் தே பால் புனித வின்சென்ட் தே பால்  

புனித வின்சென்ட் தே பால் குடும்பத்தின் 5ம் நூற்றாண்டு துவக்கம்

புனித வின்சென்ட் தே பால், கூட்டமைப்பு, 2017ம் ஆண்டு, தன் 4ம் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பித்ததையடுத்து, இக்கூட்டமைப்பின் 5வது நூற்றாண்டு இன்றையத் திருநாளுடன் ஆரம்பமாகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 27, இவ்வியாழனன்று, புனித வின்சென்ட் தே பால் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, மாலை 6.30 மணிக்கு, உரோம் நகரின் புனித சுவக்கீன் பங்குக் கோவிலில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிகழ்ந்தது.

புனித வின்சென்ட் தே பால், 1617ம் ஆண்டு உருவாக்கிய வின்சென்ட் துறவு குழுமங்களின் கூட்டமைப்பு, 2017ம் ஆண்டு, தன் 4ம் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பித்ததையடுத்து, இக்கூட்டமைப்பின் 5வது நூற்றாண்டு, இன்றையத் திருநாளுடன் ஆரம்பமாகிறது என்று, வின்சென்சியன் குடும்பத்தின் உலகத் தலைவர், அருள்பணி Tomaž Mavrič அவர்கள் அறிவித்துள்ளார்.

வின்சென்சியன் குடும்பத்தின் தனிவரம், பிறரன்பு

வின்சென்சியன் குடும்பத்தின் தனிவரமான பிறரன்பு பணிகளில் இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இன்னும் ஆழம் காணவேண்டும் என்று அருள்பணி Mavrič அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

2017ம் ஆண்டு இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் 4வது நூற்றாண்டை சிறப்பித்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பிய ஒரு செய்தியில், வின்சென்சியன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்வோரிடம் பணிபுரிய செல்லும்போது, தங்கள் தனிப்பட்ட திறமைகளை அல்ல, மாறாக, தூய ஆவியாரின் கொடைகளை அவர்களுக்கு வழங்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த நான்காம் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வின்சென்சியன் குடும்பத்தைச் சேர்ந்த 11,000த்திற்கும் அதிகமானோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் சந்த்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2018, 15:30