தேடுதல்

"Better World" மையத்தில் புலம்பெயர்ந்தோர் குழந்தைகளைச் சந்திக்கும் கர்தினால் Konrad Krajewski "Better World" மையத்தில் புலம்பெயர்ந்தோர் குழந்தைகளைச் சந்திக்கும் கர்தினால் Konrad Krajewski 

புலம்பெயர்ந்தோரை சந்தித்த கர்தினால் Krajewski

திருத்தந்தையின் தர்மப்பணிகளை ஒருங்கிணைக்கும் கர்தினால் Krajewski அவர்கள், "Better World" மையத்தில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து, திருத்தந்தையின் ஆசீரை வழங்கினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் கர்தினால் Konrad Krajewski அவர்கள், செப்டம்பர் 5, இப்புதனன்று, உரோம் நகருக்கருகே உள்ள ரோக்கா தி பாப்பா (Rocca di Papa) எனுமிடத்தில் இயங்கிவரும் "Better World" மையத்திற்குச் சென்று, அங்கு தங்கியிருந்த புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார்.

ஆகஸ்ட் 16ம் தேதி, லிபியாவிலிருந்து இத்தாலி நோக்கி புறப்பட்டு, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 190க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை, இத்தாலிய கடற்படையைச் சேர்ந்தவர்கள், Diciotti என்ற கப்பலின் துணைகொண்டு காப்பாற்றி, இத்தாலிக்குக் கொணர்ந்தனர்.

இவர்களை ஏற்றுக்கொள்வதில் இத்தாலிய அரசுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி, தற்போது, அவர்கள், இத்தாலி, ஆல்பேனியா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் குடிபெயர்வதற்கு ஒப்பந்தங்கள் உருவாயின.

இத்தாலியின் பல மறைமாவட்டங்கள், புலம்பெயர்ந்தோரை வரவேற்க தயாராக உள்ள நிலையில், "Better World" மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த புலம் பெயர்ந்தோருக்கு, திருத்தந்தையின் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்க, கர்தினால் Krajewski அவர்கள் சென்றிருந்தார்.

மேலும், இத்தாலிய ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்று, உரோம் நகரிலும், சுற்றுப்புறத்திலும் வாழும் வறியோருக்கு 20,000 ‘ஐஸ்கிரீம் பாக்கெட்டு’களை இப்புதனன்று வழங்கியது என்றும், இவற்றில் 1,300 ‘பாக்கெட்டுகள்’, "Better World" மையத்திற்கு வழங்கப்பட்டன என்றும், திருத்தந்தையின் தர்மப்பணிகள் அலுவலகம் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2018, 15:12