தேடுதல்

Vatican News
பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்   (ANSA)

வன்முறை ஒருபோதும் அமைதியைக் கொணராது - திருப்பீடம்

எந்த ஒரு நாட்டிலும், வன்முறைகள் வழியே ஒருபோதும் அமைதியைக் கொணரமுடியாது என்பதை, திருப்பீடம் மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. - பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலவும் மனிதாபிமான அவசர நிலை குறித்து திருப்பீடம் மிகுந்த கவலை கொண்டுள்ளது என்று, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 18ம் தேதி முதல், ஐ.நா. தலைமையகத்தில் நிகழ்ந்து வரும் 73வது அமர்வின் ஒரு பகுதியாக, மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து நிகழ்ந்த கலந்துரையாடலில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற பேராயர் காலகர் அவர்கள், தன் கருத்துக்களைப் பதிவு செய்தபோது, இவ்வாறு கூறினார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து திருப்பீடத்தின் கவலை

உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலையைப் போலவே, மத்திய ஆப்ரிக்க குடியரசிலும், கடந்த சில ஆண்டுகளாக அமைதி மிகவும் குலைந்துள்ளது என்றும், இந்நிலையால், அந்நாட்டின் பெண்களும், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பேராயர் காலகர் அவர்கள் கவலை தெரிவித்தார்.

உள்நாட்டு போர்களில் மேலும் ஆபத்தை விளைவிக்கும் வண்ணம், அந்நிய நாடுகளிலிருந்து வர்த்தகம் செய்யப்படும் போர்க்கருவிகள் பயன்படுகின்றன என்பதையும், பேராயர் காலகர் அவர்கள், வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

வன்முறைகள் வழியே அமைதியைக் கொணரமுடியாது

எந்த ஒரு நாட்டிலும், வன்முறைகள் வழியே ஒருபோதும் அமைதியைக் கொணரமுடியாது என்பதை, திருப்பீடம் மீண்டும் மீண்டும் கூறிவருகிறது என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், திறந்த மனதுடன் மேற்கொள்ளப்படும் உரையாடல், மன்னிப்பு, ஒப்புரவு ஆகியவை மட்டுமே அமைதியை உறுதி செய்யும் வழிகள் என்று வலியுறுத்திக் கூறினார்.

28 September 2018, 16:33