பேராயர் இவான் யுர்கோவிச் பேராயர் இவான் யுர்கோவிச் 

தண்ணீர், புலம்பெயர்ந்தோர் பற்றி பேராயர் யுர்கோவிச்

குடிபெயர்வோர், புகலிடம் தேடுவோர் போன்றோர், சுத்தமான குடிநீரையும், சுகாதார வசதிகளையும் பெறுவதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர், தண்ணீரைப் பெறுவதற்கு அடிப்படை உரிமையைக் கொண்டிருக்கும்வேளை, தண்ணீரும், தண்ணீர் வளங்களும் நியாயமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று, திருப்பீட அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார்.

தண்ணீர் மற்றும், நலவாழ்வு என்ற தலைப்பில், ஜெனீவாவில் நடைபெற்ற, ஐ.நா.வின் மனித உரிமைகள் அவையின் 39வது அமர்வில், செப்டம்பர் 10, இத்திங்களன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்கோவிச் அவர்கள், ஒவ்வொரு மனிதரும் தண்ணீர் வசதியைப் பெறுவது, அவரின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்தோரும் தண்ணீரும்

தண்ணீரைப் பெறுவது, ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமை என்று பேசும்போது, புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் சுத்தமான குடிநீரையும், சுகாதார வசதிகளையும் பெறுவதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்பது மறக்கப்படக் கூடாது என்று, பேராயர் யுர்கோவிச் அவர்கள் கூறினார்.

தண்ணீரை வெறும் விற்பனைப் பொருளாக நோக்குவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும், மனிதரின் அடிப்படை மனித உரிமைகளைப் புறக்கணித்து, இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரை, தனியார் மயமாக்குவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார், பேராயர் யுர்கோவிச். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2018, 15:09