தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் - கோப்புப் படம் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் - கோப்புப் படம் 

தொற்றிப் பரவாத நோய்களைக் கட்டுப்படுத்த...

தொற்றிப் பரவாத நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், அவை வராமல் தடுப்பதிலும், ஐ.நா. அவை மேற்கொண்டுள்ள முயற்சிகளை திருப்பீடம் பாராட்டுகிறது - பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொற்றிப் பரவாத நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், அவை வராமல் தடுப்பதிலும், ஐ.நா. அவை மேற்கொண்டுள்ள முயற்சிகளை திருப்பீடம் பாராட்டுகிறது என்று, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் 73வது அமர்வின் பல்வேறு கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பாகப் பங்கேற்றுவரும் பேராயர் காலகர் அவர்கள், "2030ம் ஆண்டு முன்னேற்றம் நோக்கி: தொற்றிப் பரவாத நோய்களைக் கட்டுப்படுத்துதல், தடுத்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நோய்களை உருவாக்கும் நான்கு காரணங்கள்

புகையிலை பயன்பாடு, ஆபத்தான அளவு மதுபானங்களின் பயன்பாடு, நலமற்ற உணவு, தேவையான உடல் பயிற்சி இல்லாமை ஆகிய நான்கு காரணங்கள், நோய்கள் உருவாக வழி வகுக்கின்றன என்பதை, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மக்களின் உடல் நலன் மீது அக்கறை காட்டும் அதே வேளையில், சுற்றுச்சூழல் மீதும் நாம் அக்கறை காட்டவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தை, பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.

சமுதாயம், கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் என்ற பல அம்சங்களும் மனிதர்களின் உடல் நலனை தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்து, அரசுகள் வகுக்கும் திட்டத்தில், அனைத்து அம்சங்களுக்கும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று, பேராயர் காலகர் அவர்கள், ஐ.நா. அவை கூட்டத்தில் விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2018, 16:33