தேடுதல்

தென்னாப்ரிக்காவில் கொண்டாடப்பட்ட மண்டேலா நூற்றாண்டு விழாவில், ஐ.நா.அவை பொதுச் செயலர் கூட்டேரஸ் தென்னாப்ரிக்காவில் கொண்டாடப்பட்ட மண்டேலா நூற்றாண்டு விழாவில், ஐ.நா.அவை பொதுச் செயலர் கூட்டேரஸ் 

மண்டேலா அமைதி உச்சி மாநாட்டில் பேராயர் காலகர் உரை

தன் சிறைவாசத்தால் புடமிடப்பட்ட மண்டேலா அவர்கள், தென்னாப்பிரிக்காவில் இனவெறியை ஒழித்தது, நமக்குச் சொல்லித்தரப்படும் நல்லதொரு மாற்று வழி - பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நெல்சன் மண்டேலா அவர்களின் மரபு, அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றின் வளர்ச்சியோடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கூறினார்.

நியூ யார்க் நகரில் செப்டம்பர் 24, இத்திங்களன்று, ஐ.நா. தலைமையகத்தில், நெல்சன் மண்டேலா நூற்றாண்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதி உச்சி மாநாட்டில், பேராயர் காலகர் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

நெல்சன் மண்டேலா அவர்களின் நூற்றாண்டு நினைவு, ஐரோப்பாவின் அடையாளத்தைச் சிதைத்த முதல் உலகப் போரின் முதல் நூற்றாண்டு நினைவையும் உள்ளத்தில் பதிக்கிறது என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், இவ்விரு எதிர் துருவங்களும் அமைதியைக் குறித்த பாடங்களை கற்றுத் தருகின்றன என்று கூறினார்.

எதிரியை அவமானப்படுத்தி, வெற்றியைக் கொண்டாடுவது, பகைமை உணர்வுகளை மேலும் தூண்டும் என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், தன் சிறைவாசத்தால் புடமிடப்பட்ட மண்டேலா அவர்கள், இனவெறியை தென்னாப்பிரிக்காவில் ஒழித்தது, நமக்குச் சொல்லித்தரப்படும் நல்லதொரு மாற்று வழி என்று  எடுத்துரைத்தார்.

நெல்சன் மண்டேலா அவர்கள் விட்டுச்சென்றுள்ள மரபில், ‘உபுன்டு’ (Ubuntu) என்ற எண்ணம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் காலகர் அவர்கள், மனித குலத்தில் பிறந்த நாம் அனைவரும் ஒருவரோடொருவர் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பது, மண்டேலா அவர்கள் சொல்லித்தரும் உன்னத பாடம் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2018, 16:01