தென் கொரிய அதிபருடன் பேராயர் காலகர் தென் கொரிய அதிபருடன் பேராயர் காலகர்  

மத்தியக் கிழக்குப் பகுதியில் மடிந்துவரும் கிறிஸ்தவம்

கிறிஸ்தவம் பிறந்த தொட்டிலான மத்தியக் கிழக்குப் பகுதியில், கிறிஸ்தவ சமூகங்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துவருவது, ஒரு கசப்பான உண்மை - பேராயர் காலகர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவம் பிறந்த மத்தியக் கிழக்குப் பகுதியில், கிறிஸ்தவ சமூகங்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துவருவது, ஒரு கசப்பான உண்மையாக இருந்து வருகிறது என்று, ஐ.நா.அவை தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தன் கவலையை வெளியிட்டார், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்.

"பெரும் இன்னலிலிருந்து விடுதலை: கிறிஸ்தவ மத சிறுபான்மையினர் மற்றும் ஆபத்தில் உள்ள மதப் பன்மைத்தன்மை" என்ற தலைப்பில் ஐ.நா.வின் 73வது அமர்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தில், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர் பேராயர் காலகர் தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதியிலுள்ள சில நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாகவும், சில நாடுகளில் கிறிஸ்தவம் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், தற்போது, அது மடியும் நிலையில் உள்ளதாகவும் பேராயர் காலகர் அவர்கள் எடுத்துரைத்தார்.

இஸ்லாமியரோடு இணக்கமுடன் வாழ்ந்துவந்த கிறிஸ்தவ சமுதாயம், மத்தியக்கிழக்குப் பகுதியின் கலாச்சாரத்தைக் காப்பதற்கு வழங்கியுள்ள பங்களிப்பு குறித்தும் பேசிய பேராயர் காலகர் அவர்கள், அண்மைய ஆண்டுகளில், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களால், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்படுவதைக் குறித்து கவலையை வெளியிட்டார்.

மக்கள் தங்கள் சொந்த இல்லங்களைவிட்டு விரட்டியடிக்கப்படுவது, மதம் சார்ந்த பிரச்சனை அல்ல, மாறாக, அது மனித உரிமை தொடர்பான பிரச்சனை என்பதால், இதில் தலையிட்டு, நீதியை நிலைநாட்டும் கடமை, அரசு அதிகாரிகளுக்கும் உள்ளது என்று, பேராயர் காலகர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மதம், இனம், நிறம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கவேண்டிய அரசுகளின் கடமையையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர் பேராயர் காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2018, 17:15