தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்   (Vatican Media)

வறுமைப்பட்ட நாடுகளில் காசநோய் அதிக அளவில்...

வறுமைப்பட்ட நாடுகளில் வாழ்வோரிடையே காசநோய் அதிக அளவில் பரவியுள்ளது; இந்நோயுற்றோரில், 99 விழுக்காட்டினர் மரணமடைகின்றனர் - பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

காசநோயை எதிர்த்துப் போராட, முதல் முறையாக, பன்னாட்டளவில் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்பதில், திருப்பீடம் மகிழ்வடைகிறது என்று, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கூறினார்.

காசநோய் ஒழிப்பு கூட்டத்தில் பேராயர் காலகர்

நியூ யார்க் நகரில், ஐ.நா. அவை தலைமையகத்தில், செப்டம்பர் 18ம் தேதி முதல் நடந்துவரும் 73வது பொது அமர்வின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 26, இப்புதனன்று, காசநோய் ஒழிப்பை மையப்படுத்தி நடைபெற்ற கூட்டத்தில், பேராயர் காலகர் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

மனித வரலாற்றை பல நூற்றாண்டுகளாக பாதித்துவந்த காசநோயை, வளர்ந்துவிட்ட, செல்வம் மிகுந்த நாடுகள் முற்றிலும் ஒழித்துவிட்டதாகக் கூறினாலும், உலக மக்கள் தொகையில் கால் பகுதியினர், இந்த நோயுடன் போராடுகின்றனர் என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

வறுமைப்பட்ட நாடுகளில் காசநோய்

வறுமைப்பட்ட நாடுகளில் வாழ்வோரிடையே, இந்நோய் அதிக அளவில் பரவியுள்ளது என்றும், அந்நாடுகளில், இந்நோயுற்றோரில், 99 விழுக்காட்டினர் மரணமடைகின்றனர் என்றும், பேராயர் காலகர் அவர்கள், வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.

இந்நோயுற்றோர் சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுவதைப் பற்றி குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், இத்தகைய சமுதாய, கலாச்சார தடைகளை நீக்க, தகுதியான விழிப்புணர்வு கல்வி வழங்கப்படவேண்டும் என்று, தன் உரையில் விண்ணப்பித்தார்.

“மரக்கேஷூக்கு செல்லும் சாலை” கூட்டத்தில் பேராயர் காலகர்

மேலும், உலகமனைத்தையும் பாதித்துவரும் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை குறித்து, ஐ.நா. தலைமையகத்தில், “Road to Marrakech” அதாவது, “மரக்கேஷூக்கு செல்லும் சாலை” என்ற தலைப்பில் நிகழ்ந்த மற்றொரு கூட்டத்தில், செப்டம்பர் 26, இப்புதனன்று, பேராயர் காலகர் அவர்கள், திருப்பீடத்தின் சார்பில், தன் எண்ணங்களைப் பதிவு செய்தார்.

குடிபெயர்தல், புலம்பெயர்தல் ஆகிய சவால்களுக்கு, நாம் அளிக்கக்கூடிய அர்த்தமுள்ள பதிலிறுப்பு, ஒருங்கிணைப்பும், இரக்கமும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்துக்களை, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் நினைவு கூர்ந்தார்.

குடிபெயர்தல், புலம்பெயர்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு உலகளாவிய தீர்வுகாணும் வகையில் 2015ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும் ஒரு பன்னாட்டு முயற்சிக்கு “Road to Marrakech” அதாவது, “மரக்கேஷூக்கு செல்லும் சாலை” என்று பெயரிடப்பட்டுள்ளது.

27 September 2018, 15:38