ஐ.நா.வில் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் அவுசா ஐ.நா.வில் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் அவுசா 

சுற்றுச்சூழல் சட்டங்களில் குறைகளைத் தீர்ப்பது, நம் முதல் கடமை

செல்வம் மிகுந்த நாடுகளில் வாழ்வோர் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடற்ற வாழ்வால், பல கோடி மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற இயலாமல் போகிறது - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"நமது பொதுவான இல்லமான உலகைக் காப்பது நமக்கு முன்னிருக்கும் அவசரமான சவால்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ள சொற்களை, ஐ.நா. அவையில் பணியாற்றும் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

"சுற்றுச்சூழலுக்காக உலகளாவிய ஒப்பந்தத்தை நோக்கி" என்ற தலைப்பில், செப்டம்பர் 5 இப்புதன் முதல், 7 இவ்வெள்ளி முடிய, ஐ.நா.அவை தலைமையகத்தில் நடைபெறும் திட்டக்குழு கூட்டத்தில், இப்புதனன்று உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், சுற்றுச்சூழல் குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள உலகளாவிய சட்டங்களில் காணப்படும் குழப்பங்களையும், குறைபாடுகளையும் தீர்ப்பது, நம் முதல் கடமை என்று கூறினார்.

ஒரு சில தனி மனிதர்கள், நிறுவனங்கள், நாடுகள், மேற்கொண்டுள்ள கட்டுப்பாடற்ற வாழ்வு முறைகளால், உலகில் வாழும் பல கோடி மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற இயலாமல் போகிறது என்பதை உணரவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

இயற்கை வளங்களைக் காப்பதற்கு முடிவுகள் எடுக்கப்படும் வேளைகளில், இயற்கையோடு இணைந்து வாழ்வதில் அனுபவம் மிக்க பழங்குடியினரின் கருத்துக்களுக்கு, அரசுகள் செவி மடுக்கவேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2018, 15:03