தேடுதல்

விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் கர்தினால் லதாரியா விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் கர்தினால் லதாரியா 

மரணதண்டனை குறித்த மறைக்கல்வியில் மாற்றங்கள்

மரண தண்டனை மனித மாண்பைக் குலைப்பதால், அதனை உலகெங்கும் ஒழிப்பதற்கு திருஅவை முயற்சிகள் மேற்கொள்ளும் - மறைக்கல்வி, 2267 பிரிவில் கூறப்பட்டுள்ள புதிய திருத்தங்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மரண தண்டனை குறித்து கத்தோலிக்க மறைக்கல்வி, 2267 என்ற பிரிவில் இதுவரை கூறப்பட்டு வந்த கருத்துக்களில் மாற்றங்களை உருவாக்கி, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயம், மாற்றப்பட்ட புதிய கருத்துக்களை, ஆகஸ்ட் 2, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் Luis Francisco Ladaria அவர்கள், இவ்வாண்டு மே மாதம் 11ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், இந்த மாற்றங்கள் அடங்கிய வரைவை அவருக்கு அளித்து, அவரது ஒப்புதலைப் பெற்றுள்ளதாக ஆயர்களுக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனை குறித்த பழைய மறைக்கல்வி கருத்து

நீதியான முறையில் அமைக்கப்பட்ட அதிகாரிகள், நேர்மையான வழக்கை நடத்தி, அதன் இறுதியில் வழங்கிய மரண தண்டனை, ஒருவர் செய்த மிகக் கொடிய குற்றத்திற்கு தகுதியான தண்டனை என்று மறைக்கல்வி 2267 எண் இதுவரை கூறி வந்தது.

மரணதண்டனை குறித்த புதிய மறைக்கல்வி கருத்து

தீவிரமான குற்றங்களை ஒருவர் செய்திருந்தாலும், அவரது மனித மாண்பு, அக்குற்றங்களால் எவ்வகையிலும் குறைவதில்லை என்றும், தீவிரக் குற்றங்கள் புரிவோரை மக்களிடமிருந்து பிரித்து, காவலில் வைப்பதில், தகுந்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், காவலில் வைக்கப்பட்டிருப்போர், மனம் திருந்தும் வாய்ப்புக்கள் உண்டு என்றும், மறைக்கல்வி 2267 என்ற பிரிவில், புதிதான எண்ணங்கள் கூறப்பட்டுள்ளன.

மரணதண்டனையை அறவே ஒழிப்பதில் திருஅவை

இந்த எண்ணங்களின் அடிப்படையில், மனித மாண்பு எந்தச் சூழலிலும் சிதைக்கப்படக் கூடாது என்பதில் திருஅவை உறுதியாக உள்ளது என்றும், மரண தண்டனை இந்த மாண்பைக் குலைப்பதால், அதனை உலகெங்கும் ஒழிப்பதற்கு திருஅவை முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும், இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் அடங்கிய மறைக்கல்வி 2267ம் எண்ணை, இவ்வியாழனன்று, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயம் வெளியிட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2018, 15:47