தேடுதல்

Vatican News
ரிமினி 39வது கூட்டம் ரிமினி 39வது கூட்டம் 

ரிமினி 39வது கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

பாலங்களைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, சுவர்களை எழுப்பும் போக்கிற்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

“இயேசு, வாழ்வின் உணவு என்றும், திருநற்கருணை, திருஅவையின் இதயத்தைத் தட்டி எழுப்புகிறது மற்றும், அன்புகூர்வதற்குரிய ஆர்வத்தை நம்மில் புதுப்பிக்கின்றது” என்றும், இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டரில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்தாலியின் ரிமினி நகரில் இஞ்ஞாயிறன்று ஆரம்பித்துள்ள 39வது கூட்டத்திற்கு, Emilia Romagna ஆயர் Francesco Lambiasi அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில், இஞ்ஞாயிறன்று செய்தி அனுப்பியுள்ளார், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின். மனிதரை மகிழ்ச்சிப்படுத்தும் சக்திகளே, வரலாற்றையும் இயக்குகின்றன என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெறுகின்றது.

சிறந்ததோர் உலகு பற்றிய கனவை, கிறிஸ்தவர்கள் ஒருபோதும் விட்டுவிடக் கூடாது என்றும், நம்மிலிருந்து வித்தியாசமானவர்களுக்கு நம்மைத் திறப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து விலகிச் செல்கிறோம் என்றும், திருத்தந்தை கூறியதாக, அச்செய்தி தெரிவிக்கிறது. ஆயினும், உண்மையான விசுவாசம், மாற்றத்திற்கு ஆழமான ஆவலை எப்போதும் தூண்டுகின்றது என்றும் அச்செய்தி கூறுகின்றது.

எந்த ஒரு முயற்சியும், எந்த ஒரு புரட்சியும் மனிதரின் இதயத்தை திருப்திபடுத்த இயலாது, மாறாக, தமது எல்லையில்லா ஆவலால் நம்மைப் படைத்துள்ள கடவுளின் பிரசன்னத்தால் மட்டுமே, மனிதரின் இதயத்தை திருப்திபடுத்த முடியும் என்று, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போலியான மகிழ்வைக் கொடுப்பதற்கு உறுதியளிக்கும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வாழுமாறும், அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, வருகிற சனி, ஞாயிறு தினங்களில் தான் மேற்கொள்ளும் அயர்லாந்து திருத்தூதுப் பயணம், உலக குடும்பங்கள் மாநாடு ஆகியவற்றுக்காகவும், தனக்காகவும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

19 August 2018, 16:29