உலகளாவிய சுற்றுலா உலகளாவிய சுற்றுலா  

கர்தினால் டர்க்சன் - உலக சுற்றுலா தினச் செய்தி

‘சுற்றுலாவும், டிஜிட்டல் உருமாற்றமும்’ என்ற தலைப்பில் வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக சுற்றுலா தினத்திற்கு, கர்தினால் டர்க்சன் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நவீன தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுலாப் பணிகளையும், உற்பத்திகளையும் மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், சுற்றுலாவின் நிலையான மற்றும் நீடித்த முன்னேற்றத்திற்கு உதவுவதாகவும் அமைய வேண்டும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகிற செப்டம்பரில் கடைப்பிடிக்கப்படும், உலக சுற்றுலா தினத்திற்கென,  ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களின் சமூக வாழ்வு, உறவுகள், பணி, நலவாழ்வு, தொடர்புகள் போன்றவற்றை, புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பாதித்துள்ளன எனவும், இணையத்தில் தாங்கள் பார்த்த படங்கள் மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில், டிஜிட்டல் உலகின் ஐம்பது விழுக்காட்டு சுற்றுலாப் பயணிகள், பயணங்களை மேற்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் டர்க்சன்.

சுற்றுலா பயணிகளில் எழுபது  விழுக்காட்டினர், ஏற்கனவே சுற்றுலா சென்றுள்ளவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள காணொளிகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டறிந்து அப்பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும், அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், நீடித்த, நிலையான சுற்றுலாவின் தேவை, குறைத்து மதிப்பிடப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு மேய்ப்புப்பணியாற்றுவதில் திருஅவை எப்போதும் அக்கறையாக உள்ளது என்றும் உரைத்துள்ள, கர்தினால் டர்க்சன் அவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தும் இளைய தலைமுறைகள், இந்த டிஜிட்டல் உலகில் தனித்துவத்தை இழந்துவிடாதிருப்பதில் அக்கறை காட்டப்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகிற அக்டோபரில், இளையோரை மையப்படுத்தி, 15வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவிருப்பதையும் குறிப்பிட்டுள்ள, கர்தினால் டர்க்சன் அவர்கள், உருவாக்குதல் மற்றும் மனிதயியல் பற்றிய கல்வி இளையோர்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2018, 16:06