ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

நாடுகளுக்கிடையே சமரசம் செய்யும் திருப்பீட முயற்சிகள்

நாடுகளுக்கிடையே உருவான மோதல்கள் அனைத்திலும், திருஅவை, உரையாடல் வழியே சமரசம் உருவாக பாடுபட்டுள்ளது - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1978ம் ஆண்டு, சிலே நாட்டிற்கும், அர்ஜென்டீனா நாட்டிற்கும் இடையே, எல்லைத் தகராறு எழுந்தபோது, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், உரையாடல் வழியே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, இவ்விரு நாட்டினரையும் அழைத்த நிகழ்வை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் குறிப்பிட்டார்.

ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், 'மோதல்களைத் தீர்க்க, இணக்கமான வழிகளில் சமரசம் செய்தல்' என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற ஓர் அமர்வில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

1978ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் மேற்கோண்ட அந்த சமரச முயற்சியால், போர் ஒன்று நிறுத்தப்பட்டதற்காக, சிலே நாடும், அர்ஜென்டீனா நாடும் கடந்த 40 ஆண்டுகளாக திருத்தந்தையை நன்றியுடன் எண்ணிப்பார்த்து வருகின்றன என்று பேராயர் அவுசா அவர்கள் குறிப்பிட்டார்.

பல்வேறு நாடுகளில் நிலவிய உள்நாட்டு மோதல்கள், நாடுகளுக்கிடையே உருவான மோதல்கள் அனைத்திலும், திருஅவை, உரையாடல் வழியே சமரசம் உருவாக பாடுபட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், அண்மைய காலத்தில் கொலம்பியா நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் சுட்டிக்காட்டினார்.

சமரச முயற்சிகளை துவக்கும் மனிதர்களிடம் காணப்படும் நம்பகத்தன்மை, வெளிப்படையான, செயல்பாடுகள், உண்மையையும், நீதியையும் சார்ந்திருத்தல் ஆகிய குண நலன்கள், இன்றைய உலகில் அதிகம் தேவைப்படுகின்றன என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மோதல்களை மேற்கொண்டுள்ள அதிகார அமைப்புக்களை மட்டும் ஈடுபடுத்தாமல், இரு தரப்பிலும், எளிய மக்களையும் ஈடுபடுத்துவது முக்கியம் என்ற உண்மையை, சமரச முயற்சிகளை மேற்கொண்டுவரும் திருஅவை தலைவர்கள் உணர்ந்துள்ளனர் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2018, 14:18