தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

உலக ஆயர்களின் 15வது மாமன்றத்தை வழிநடத்த, நான்கு கர்தினால்கள்....

உலக ஆயர்களின் 15வது மாமன்றத்தை வழிநடத்த, நான்கு கர்தினால்களை, தலைமைப் பிரதிநிதிகளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள் 

ஜூலை,16,2018. இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்களின் 15வது மாமன்றத்தை வழிநடத்த, நான்கு கர்தினால்களை, தலைமைப் பிரதிநிதிகளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14 இச்சனிக்கிழமை நியமனம் செய்தார்.

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ, மடகாஸ்கர் கர்தினால் Désiré Tsarahazana, மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ, மற்றும் பாப்புவா நியூ கினி கர்தினால், ஜான் ரிபாட் (John Ribat) ஆகியோரை திருத்தந்தை நியமித்துள்ளார்.

தலைமைப் பிரதிநிதிகளாக (presidents-delegate) திருத்தந்தை நியமித்துள்ள இவர்கள், திருத்தந்தையின் சார்பாக, மாமன்ற அமர்வுகளை வழிநடத்துவதோடு, ஒவ்வொரு அமர்விலும் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்று, கையெழுத்திடுவதும் இவர்களின் பொறுப்பு.

அதேவண்ணம், உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதியில் உருவாக்கப்படும் ஏட்டினில், தலைமைப் பிரதிநிதிகளும், மாமன்ற பொதுச் செயலரும் கையெழுத்திடவேண்டும்.

வருகிற அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, "இளையோர், நம்பிக்கையும், இறையழைத்தலைத் தேர்ந்து தெளிதலும்" என்ற மையக்கருத்துடன், உலக ஆயர்களின் 15வது மாமன்றம், வத்திக்கானில் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2018, 13:54