திருப்பீடத் தொடர்புத் துறையின் புதிய தலைவர், பவுலோ ருபீனி, திருத்தந்தையுடன் திருப்பீடத் தொடர்புத் துறையின் புதிய தலைவர், பவுலோ ருபீனி, திருத்தந்தையுடன் 

வானொலியின் பணிகள் தொடரவேண்டும் – திருத்தந்தையின் விருப்பம்

திருப்பீடத்தின் தொடர்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வந்தாலும், கணனி வழி தொடர்புகள் குறைந்த நாடுகளில், வானொலி தன் பணிகளைத் தொடரவேண்டும் என்பது திருத்தந்தையின் விருப்பம்

லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள் 

ஜூலை,16,2018. "இந்த வாய்ப்பு என்னைக் கடந்துபோக விடுவதற்கு எனக்கு மனமில்லை" என்ற சொற்களுடன், திருப்பீடத் தொடர்புத் துறையின் புதிய தலைவர், பவுலோ ருபீனி அவர்கள், கிழக்கு ஆப்ரிக்க ஆயர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அண்மையில் நியமனம் பெற்ற ருபீனி அவர்கள், வருகிற செப்டம்பர் மாதம் தன் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார் என்றாலும், கிழக்கு ஆப்ரிக்க ஆயர்களின் கூட்டம் முக்கியத்துவம் நிறைந்தது என்பதால், அக்கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

1994ம் ஆண்டு நடைபெற்ற ஆப்ரிக்க ஆயர்கள் கூட்டத்தில், மறைமாவட்ட அளவில் பல வானொலி நிலையங்களை நிறுவுவதற்கு ஆயர்கள் எடுத்த முடிவு, மிகச் சிறந்த முடிவு என்றும், இந்த வானொலி நிலையங்கள், வத்திக்கான் வானொலியுடன் இணைந்து செயலாற்றுவது, மிகவும் போற்றுதற்குரியது என்றும், ருபீனி அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பீடத்தின் தொடர்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் டிஜிட்டல் வழி தொடர்பு நோக்கி நிகழ்ந்து வந்தாலும், கணனி வழி தொடர்புகள் குறைந்த நாடுகளில், வானொலி தன் பணிகளைத் தொடரவேண்டும் என்பது திருத்தந்தையின் விருப்பமாக உள்ளது என்பதையும் ருபீனி அவர்கள், இம்மடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

AMECEA ஆயர்களின் கூட்டம் Addis Ababa நகரில் நிகழும் அதே வேளையில், எரித்ரியாவும், எத்தியோப்பியாவும் தங்கள் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதும், மிக நல்லதொரு தருணமாக அமைத்துள்ளது என்பதையும், ருபீனி அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ வாழ்வில் மிகவும் துடிப்பு நிறைந்த ஆப்ரிக்க நாடுகளில், வானொலி வழியே, நற்செய்தியும், திருத்தந்தையின் குரலும், பல்லாயிரம் கத்தோலிக்கர்களின் இல்லங்களைச் சென்றடைகின்றன என்பதில், திருப்பீட தொடர்புத் துறை தனி நிறைவு அடைகிறது என்று இத்துறையின் புதிய தலைவர் ருபீனி அவர்கள், தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2018, 14:04