கர்தினால் பீட்டர் டர்க்சன் கர்தினால் பீட்டர் டர்க்சன் 

கிறிஸ்தவக் குடும்பங்கள், முழு மனிதக் குடும்பத்திற்கும்.....

நல்ல குடும்பங்கள், திறமைகள், கொடைகள், மற்றும் வளங்களை ஒன்றுசேர்த்து, மனித மாண்பையும் வளர்ச்சியையும் குறைத்து மதிப்பிடுபவற்றை எதிர்கொள்ளும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாத்திமாவில் “நமதன்னையின் அணிகள்” இயக்கத்தினர் நடத்திய 12வது பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தம்பதியர்களுக்கு உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், மனித சுற்றுச்சூழலில் தம்பதியரின் ஆன்மீகம் என்ற தலைப்பில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

கிறிஸ்தவக் குடும்பங்கள், உண்மையான மனித மாண்பையும், அறநெறியையும் பிறப்பித்து, முழு மனிதக் குடும்பத்திற்கும் எடுத்துக்காட்டுகளாய் விளங்க முடியும் என்றும், இவ்வாறு வாழ்வதன் வழியாக, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியில் வாழவும், அதைப் பாதுகாக்கவும் இயலும் என்றும் கூறினார், கர்தினால் டர்க்சன்.

ஓர் இல்லத்தை நிர்வகிப்பவர்கள், நம் பொதுவான இல்லத்தையும் நிர்வகிப்பதற்குப் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்பதை உணர்வார்கள் என்றும், உறவுகள், பிரச்சனைகள், அர்ப்பணங்கள் போன்றவற்றுடன், ஒரு குடும்பமாக, சிறிய குழுவில் வாழ்பவர்கள், மக்களுக்கு இடையே சரியான பரிமாற்றங்கள் இடம்பெறுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள் என்றும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

போதுமான ஊதியமின்மை, வேலையின்மை, பாதுகாப்பின்மை, பசி, குடியிருப்பின்மை, சுற்றுச்சூழல் மாசுகேடு, தண்ணீர்ப் பற்றாக்குறை, மனித வர்த்தகம், அடிமைமுறை போன்ற பல பிரச்சனைகளை இக்காலக் குடும்பங்கள் எதிர்கொள்கின்றன என்றுரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள்,  இவையனைத்தின் மத்தியிலும், உலக அளவில் சிறந்த எண்ணங்கள் வளர குடும்பங்கள் உதவ முடியும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 15:53