தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்,கர்தினால் பீட்டர் டர்க்சன் திருத்தந்தை பிரான்சிஸ்,கர்தினால் பீட்டர் டர்க்சன் 

கடல்சார் தொழிலாளர்களின் துன்பங்களை எண்ணிப் பார்ப்போம்

குடுபங்களுக்கு வெகு தூரத்தில் கடலில் பணிபுரிவோர், உலக பொருளாதாரத்திற்கு ஆற்றும் பங்களிப்பு, கடலில் எதிர்நோக்கும் துயர்கள் போன்றவை குறித்து கடல் ஞாயிறு செய்தியில் கர்தினால் டர்க்சன்

பிரான்சிஸ் கிறிஸ்டோபர் - வத்திக்கான் செய்திகள்

பல மாதங்கள் தொடர்ந்து கடலிலேயே வாழ்ந்து, தங்கள் குடும்பங்களின் துன்பகரமான சூழல்களில்கூட பங்கேற்க முடியாமல் இருக்கும் கடல்சார் பணியாளர்கள் குறித்து சிறப்பாக நினைவுக்கூர்வோம் என, இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட கடல் ஞாயிறு கொண்டாட்டத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ளார், கர்தினால் பீட்டர் டர்க்சன்.

பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த ஏறத்தாழ 12 இலட்சம் தொழிலாளர்கள், மாதக்கணக்கில் கடலிலேயே வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பொருட்களை ஏற்றிச் சென்று உதவுவதன் வழியாக, அவர்கள் உலக பொருளாதாரத்திற்கு சிறப்புப் பங்காற்றுகிறார்கள் என்ற தன் பாராட்டுக்களை அதில் வெளியிட்டுள்ளார்.

நாம் பயன்படுத்தும் பொருட்களுள் ஏறத்தாழ தொண்ணூறு விழுக்காடு இவ்வாறு வந்தவையே எனக் கூறும் கர்தினால் டர்க்சன் அவர்கள், இவ்வாறு உதவுவோருக்கு  நன்றி கூறும் விதமாக, இறைவனிடம் இவர்களுக்காக செபிப்போம் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

கப்பல் தொழிலாளர்கள், சில துறைமுகங்களை வந்தடைந்தாலும், சில அரசுகளின், அல்லது, கப்பல் நிறுவங்களின் கட்டுப்பாடுகளால் நாட்டிற்குள் சுதந்திரமாகச் செல்ல முடியாமல் இருக்கும் நிலை, கடல் கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கப்பலை கடலிலேயே விட்டுவிட்டு வெளியேறவேண்டிய சூழல்கள், கடலில் சுற்றுச்சூழல் மாசுக்கேட்டு பாதிப்பு போன்றவை குறித்தும் தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார், கர்தினால் டர்க்சன்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2018, 16:24