தேடுதல்

கர்தினால் Jean-Louis Tauran கர்தினால் Jean-Louis Tauran  

உரையாடலையும், அமைதியையும் வளர்த்த கர்தினால் Tauran

கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், தன் வாழ்வில் அமைதியையும், உரையாடலையும் வளர்த்தவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,12,2018. 1943ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் பிறந்த கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், 1969ம் ஆண்டு அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றபின், 1973ம் ஆண்டு, திருப்பீடத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார்.

கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்ற Tauran அவர்களை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், 1991ம் ஆண்டு, ஆயராகவும், பின்னர், 2003ம் ஆண்டு, கர்தினாலாகவும் உயர்த்தினார்.

2007ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கர்தினால் Tauran அவர்களை, பலசமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவராக நியமித்தார். இப்பணியை அவர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றிவந்தார்.

பலசமய உரையாடல் அவையின் தலைவர் என்ற முறையில், முதல் முறையாக, கத்தோலிக்க-இஸ்லாமிய உச்சி மாநாட்டை, 2008ம் ஆண்டு உரோம் நகரில் நடத்தினார், கர்தினால் Tauran.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கொரியா ஆகிய ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்கா மற்றும் அரேபியாவின் பல்வேறு நாடுகளிலும், பலமுறை பயணங்கள் மேற்கொண்டு, சமயங்களுக்கிடையே நல்லெண்ணத்தையும், உரையாடலையும் வளர்த்தவர், கர்தினால் Tauran.

2013ம் ஆண்டு நடைபெற்ற கர்தினால்களின் 'கான்கிளேவ்' கூட்டம், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்த வேளையில், கர்தினால்கள் குழுவில் Proto-Deacon என்ற தனியிடத்தைப் பெற்றிருந்த கர்தினால் Tauran அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவின் மேல்மாடத்தில் தோன்றி, வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், உலக ஊடகங்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தெரிவைப் பற்றி அறிவித்தார்.

திருத்தந்தையின் தலைமைப்பணியிடம் பல்வேறு காரணங்களால் காலியாகும் வேளையில், திருஅவையைக் கண்காணிக்கும் உரிமை பெற்ற Camerlengo என்ற பொறுப்பில், 2014ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Tauran அவர்களை நியமித்தார்.

தான் கர்தினால் Tauran மீது கொண்டிருந்த பெரும் மரியாதை காரணமாக இப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் அவர்களின் மறைவையொட்டி, அவரது சகோதரி, Genevie've Dubert அவர்களுக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டிருந்தார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2018, 15:34