கடவுளின் கனவிற்கேற்ப நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசுவின் இரக்கத்தால் நலமடைந்த மகதலா மரியா மனமாற்றமடைந்தார் இயேசுவின் இரக்கம் நம்மை, நமது இதயத்தை மாற்றுகின்றது என்றும், கடவுளின் கனவிற்கேற்ப தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்ட மகதலாவின் வாழ்க்கைப் பாதைக்கு புதிய இலக்கை கடவுளின் இரக்கம் கொடுத்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 1 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளுக்கு யூபிலி ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் வழங்க இருக்கும் புதிய மறைக்கல்வி உரைக் கூட்டத்தின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யூபிலி ஆண்டில் எதிர்நோக்கு என்பது மகதலா மரியா போல திரும்பிப் பார்ப்பது என்று கூறினார்.
யோவான் நற்செய்தியில் இடம்பெறும் உயிர்த்தெழுந்த இயேசுவை மகதலா மரியா சந்திக்கும் நிகழ்வானது நம்மை சிந்திக்க வைக்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மகதலா மரியா திரும்பிப் பார்த்தாள் என்பது பல முறை நற்செய்திப் பகுதியில் கூறப்படுகின்றது, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தினை வலியுறுத்துகின்றது என்றும் கூறினார்.
முதல்முறையாகக் கல்லறைக்குள் குனிந்து பார்க்கின்றார் மகதலா மரியா பின்னர் திரும்பிச் செல்கின்றார் என்பது உயிர்த்த இயேசு மரணத்தின் பக்கம் இல்லை மாறாக வாழ்வின் பக்கம் இருக்கின்றார் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் ஒருவர் போன்று துன்பத்தைக் கண்டு அதிலிருந்து மீள்பவர் போன்று அவர் புரிந்து கொள்ளப்படுகின்றார் என்றும் தெரிவித்தார்.
மரியா என்று இயேசு அவரை அழைக்கும் குரல் கேட்டு அவர் திரும்பிப் பார்த்ததாக கூறப்படும் இரண்டாவது முறையில், தன்னை அழைத்தவர் இயேசு தான் என்பதை அறிந்து திரும்பிப் பார்க்கின்றார், அவரது எதிர்நோக்கு, நம்பிக்கை வளர்கின்றது என்றும், மீண்டும் கல்லறையைப் பார்த்த அவரின் கண்களில் கண்ணிர் இல்லை, தன்னை அழைத்த தன் தலைவரை அவர் அடையாளம் கண்டுகொண்ட நம்பிக்கை இருந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.
தூயஆவி நமது இதயத்தை தூண்டுவதாக நாம் உணரும்போது கடவுள் நம்மை தனிப்பட்ட விதத்தில் பெயர்சொல்லி அழைப்பதை உணர்கின்றோமா? நமது தலைவராம் இயேசுவின் குரலை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் திறன் பெற்றவர்களாக நாம் இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
திருத்தூதர்களின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் மகதலா மரியாவிடமிருந்து எதிர்நோக்குடன் இருப்பதைக் கற்றுக்கொள்வோம் என்றும், நமது வாழ்க்கைப் பயணத்தின் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான ஒரு நிலையான அழைப்பாக மனமாற்றம் அடைவோம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உயிர்ப்பின் வழியாகக் கடவுள் நம்மை மீண்டும் அவரது உலகிற்குள் படிப்படியாகக் கொண்டு வருகின்றார் என்றும் விளக்கினார்.
வாழ்வில் நடக்கும் விடயங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பது எப்படி என்று நமக்குத் தெரியுமா? மனமாற்றத்திற்கான விருப்பம் நம்மிடம் இருக்கின்றதா என்பது போன்ற கேள்விகளை நமக்குள் கேட்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அதிகப்படியான பாதுகாப்பும், தான் என்ற பெருமையும் தான், உயிர்த்த இயேசுவை அடையாளம் காண இயலாமல் செய்கின்றது என்றும் கூறினார்.
உயிர்த்த இயேசுவின் அடையாளமாக நமது முதுகிற்குப் பின்னால் இருக்கும் எளிய மக்களை நமது அழுகையிலும் விரக்தியிலும் கவனிக்காமல் விட்டுவிடுகின்றோம் என்றும், கடந்த காலத்தின் இருளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு கல்லறையின் வெறுமையை நோக்கிச்சென்று புதுஒளி பெற்ற மகதலேனா மரியா வழியாக வாழ்க்கையை நோக்கித் திரும்பக் கற்றுக்கொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு நமது பெயர் சொல்லி அழைக்கின்றார் வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இடம் இருக்கின்றது, நமக்கென்று ஒரு பணி இருக்கின்றது, அதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் அது எப்போதும் நமக்காகவே இருக்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எனது இடம் என்ன? கர்த்தர் எனக்குக் கொடுக்கும் பணி என்ன? என்ற கேள்விகள் வாழ்க்கையில் தைரியமான அணுகுமுறையை எடுக்க நமக்கு உதவட்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்