அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலகநாள் மாலைப்புகழ் வழிபாடு
மெரினா ராஜ் - வத்திக்கான்
“என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்ற இறைவார்த்தை இயேசுவை இறைத்தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக வெளிப்படுத்துகின்றது என்றும், மணமகனின் முன்செல்லும் மணப்பெண்களாக அவரது ஒளியால் சூழப்பட்டவர்களாக துறவறத்தார் தங்களைப் புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 1 சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில், அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாளுக்கு முந்தைய நாள் மாலை வழிபாட்டிற்குத் தலைமையேற்று உரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கற்பு ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் மூன்று துறவற வார்த்தைப்பாடுகளை ஏற்று வாழும் ஆண் பெண் துறவியர், உலகிற்கு ஒளியைக் கொண்டு வருபவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
உலகத்தின் தொடக்கத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும், இறைத்தந்தையின் ஒளிரும் திட்டத்திற்கு தங்களை அர்ப்பணம் செய்துள்ள துறவியர், காலத்தின் முடிவில் அதன் முழு நிறைவைக் காண்பர் என்றும், பலவீனமான மனிதகுலத்தில் இருந்து அழைக்கப்பட்ட நபர்கள் வழியாகவும், கடவுள் செய்யும் அற்புதங்கள் வாயிலாகவும் அது புலப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
1. ஏழ்மை என்னும் ஒளி
கடவுளின் வாழ்க்கையில் வேருன்றியுள்ள ஏழ்மையானது, இறைத்தந்தை, மகன் மற்றும் தூய ஆவியின் நிலையான, முழுமையான கொடை என்றும், இதனைத் தங்களது வாழ்வில் முழுமன சுதந்திரத்துடனும் தாராள மனத்துடனும், கடைபிடிக்கும் துறவியர் கடவுளின் ஆசீரைப் பெற்றுத் தருபவர்களாக மாறுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுள் தனது அன்பின் வழியாக நன்மையினை வெளிப்படுத்துகின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நிதானம், தாராள மனப்பான்மை, பகிர்வு, ஒற்றுமை ஆகியவற்றினால் அவர்களை அரவணைக்கின்றார் ஏனெனில் துறுவியர் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர் என்றும் கூறினார்.
2. கற்பு என்னும் ஒளி
தமத்திரித்துவத்தில் உருவாகும் இந்த கற்பு என்னும் ஒளியானது "மூன்று இறை மனிதர்களை பிணைக்கும் எல்லையற்ற அன்பின் பிரதிபலிப்பை" வெளிப்படுத்துகிறது என்றும், கடவுளன்பின் முழுமையான முதன்மையை மனிதனுக்கு மீண்டும் உறுதிப்படுத்தி அதை மற்ற எல்லா அன்பின் அடிப்படையாகவும் மாதிரியாகவும் சுட்டிக்காட்டுகிறது என்றும் கூறினார்.
"மனித உறவுகளில் உள் தெளிவுக்கான வளர்ந்து வரும் தேவை மற்றும் தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்புகளை மனிதமயமாக்குவதை எதிர்கொள்ள கற்பு வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது என்றும், 21 ஆம் நூற்றாண்டின் தனிமைப்படுத்தப்படுதல் எனும் தீமையிலிருந்து குணமடைய ஒரு வழி என்றும் எடுத்துரைத்தார்.
எனது விருப்பம் என்ற நிலையானது, ஒரு பலனளிக்கும் சந்திப்பின் மகிழ்ச்சியை விட நமது சொந்தத் தேவைகளின் திருப்தியை மற்றவரில் தேட நம்மைத் தள்ளுகிறது என்றும், உறவுகளில், மேலோட்டமான தன்மை, நிலையற்ற தன்மை, சுயநலம், இன்பம், முதிர்ச்சியின்மை, உறுதியற்ற பொறுப்பற்ற தன்மை போன்ற மனப்பான்மைகளை உருவாக்குகிறது என்றும் கூறினார்.
கற்பு வாழ்வு அன்பின் அழகைக் காட்டுகிறது, அத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் இறை அன்பின் பிரதிபலிப்புக்களாக இருக்கின்றனர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், துறவற வாழ்வின் ஆரம்பம் மற்றும் தொடர் உருவாக்கத்தில், ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான வளர்ச்சியை கவனித்துக்கொள்வது முக்கியம், என்றும் வலியுறுத்தினார்.
3. கீழ்ப்படிதல் என்னும் ஒளி
இறைத்தந்தை மற்றும் இயேசுவிற்கு இடையில் இருந்த கீழ்ப்படிதல் என்னும் ஒளியானது, அடிமைத்தனமற்றதாக, விடுதலை அழகு கொண்டதாக, பொறுப்புணர்வு நிறைந்ததாக, பரஸ்பர நம்பிக்கையால் உயிர்ப்பிக்கப்பட்டதாக இருந்தது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கொடையளிக்கும் இறைவார்த்தை ஒளியாக, அன்பின் பரிசாகவும் பிரதிபலிப்பாகவும், நமது சமூகத்திற்கான அடையாளமாகவும் மாறுகிறது என்றும் கூறினார்.
பேசுவதற்கு முன் செவிசாயுங்கள், இறைவார்த்தையை ஒரு செய்தியாக, புதையலாக, உதவியாக வரவேற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நமது தொடக்கத்திற்குத் திரும்புவோம், அருங்காட்சியகத்திற்கு திரும்புவது போலல்ல மாறாக நமது வாழ்வென்னும் தோற்றத்திற்குத் திரும்புவோம் என்றும், அமைதியான திருநற்கருணை ஆராதனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்