அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது இதயங்கள் அன்பு, நம்பிக்கை எதிர்நோக்கு என்னும் மூன்று நிலைகளில் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இவை மூன்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள், திருப்பயணிகளாக வாழ்க்கைப் பயணத்தில் நம்மை தூய ஆவி வழிநடத்தும் வழிகள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 3 திங்கள் கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் Scandinavi என்னும் வடக்கு ஐரோப்பாவின் நாடுகளான ஸ்வீடன், நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகள் ஏறக்குறைய 1200 பேரைச் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் நமது எதிர்நோக்கு பலப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், எண்ணிக்கையில் சிறிய அளவாக Scandinavi பகுதியில் தலத்திருஅவை இருந்தாலும்,எப்போதும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும், நம்பிக்கை என்னும் விதையானது பலதலைமுறை மறைப்பணியாளர்களாலும் விடாமுயற்சியுள்ள மக்களாலும் நடப்பட்டு, நீர்பாய்ச்சப்பட்டு, இன்றளவும் பலனளிக்கின்றன என்றும் கூறினார்.
கடவுளின் இத்தகைய செயல்களைக் குறித்து நாம் வியப்படைய வேண்டாம் ஏனெனில் கடவுள் தன்மேல் நம்பிக்கைக் கொண்ட மக்களுக்கு வாக்குறுதியளித்ததை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் மீதான நம்பிக்கையும், அவருக்குச் சொந்தமானவர்கள் மற்றும் திருஅவையின் ஒற்றுமையில் ஒருவருக்கொருவர் பற்றிய விழிப்புணர்வும் வளர்க்கப்பட்டு ஆழப்படுத்தப்பட வேண்டும் என்றும், நினைவு மற்றும் இதயம் வழியாக கிறிஸ்துவின் இரக்கத்தில் முழுமையாக இணைந்திருக்கவும், கடவுளின் கைவேலைப்பாடாக நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுளது மீட்பின் நற்செய்தியை மற்றவர்களுக்குக் கொண்டுசெல்வதை விட பெரிய செயல் எதுவுமில்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், குறிப்பாக விளிம்பு நிலை மக்கள், தனிமையில் இருப்பவர்கள், இதயத்தளவிலும் சமூக அளவிலும் தனியாக இருப்பவர்கள், முதியவர்கள், நோயாளிகள், துன்புறுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இரக்கமுள்ள தந்தையின் அன்பிற்கு சான்று பகரும் உன்னதமான பணி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமையன்று அருளாளர் கார்லோ அகுதீஸின் புனிதர் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாட இருக்கின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இன்றைய உலகில் இளைஞர்கள் இயேசுவைப் பின்பற்றுதல், அவருடைய போதனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், போன்றவற்றின் வழியாக மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் தூய்மையில் வாழ்க்கையின் முழுமையைக் கண்டறிவது எவ்வளவு உறுதியானது என்பதை நம் அனைவருக்கும் இளம்புனிதரின் வாழ்வு எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்