தேடுதல்

குழந்தைகளின் உரிமைகள் குறித்த கருத்தரங்கில் திருத்தந்தை குழந்தைகளின் உரிமைகள் குறித்த கருத்தரங்கில் திருத்தந்தை  (ANSA)

குழந்தைகளுக்கென திருத்தூது அறிவுரை மடல் வெளியிடவுள்ள திருத்தந்தை

காசாவின் குழந்தைகளுள் 96 விழுக்காட்டினர் தங்கள் சாவு எந்நேரமும் நிகழலாம் என அஞ்சிக்கொண்டிருப்பதாகவும், 50 விழுக்காட்டு குழந்தைகள் சாக விரும்புவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கும் வகையில் திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

வத்திக்கானில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி திங்களன்று குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட, உலக குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டிய பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எவ்வாறு வாழ்வில் முன்னோக்கிச் செல்கிறோம் என்பது குறித்து உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

குழந்தைகளின் வாழ்வை விட உயர்வானது வேறு எதுவுமில்லை என்ற மையக்கருத்துடன் இடம்பெற்ற இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில், இன்றைய உலகில் எவ்வித அடிப்படை மனித உரிமைகளும் இன்றி துயருறும் பல இலட்சக்கணக்கான குழந்தைகளின் துயர் குறித்து பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஏழ்மை, போர், கல்வியறிவின்மை, சுரண்டல் போன்றவைகளால் குழந்தைகள் அநீதிகளையும் பெரும்பாதிப்புகளையும் சந்தித்துவரும் இன்றைய சூழலில் குழந்தைகளின் உண்மை நிலைகள் குறித்து ஆராய வத்திக்கானில் கூடி வந்துள்ள உலக தலைவர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளுக்கான நம் அர்ப்பணத்தின் தொடர்ச்சியாகவும், அதனை திருஅவை முழுவதிலும் ஊக்குவிக்கவும் என்ற நோக்கத்தில் குழந்தைகளுக்கான அப்போஸ்தலிக்க அறிவுரை தூது மடல் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய ஜோர்டான் நாட்டு அரசி Rania Al Abdullah அவர்கள், ஒவ்வொரு குழந்தைக்கும் நம் அக்கறைக்கும் பாதுகாப்புக்குமான உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தியதோடு, காசாவில் வாழும் குழந்தைகளின் துயர நிலைகளின் புள்ளிவிவரங்களோடு எடுத்துரைத்தார்.

காசாவின் குழந்தைகளுள் 96 விழுக்காட்டினர் தங்கள் சாவு எந்நேரமும் நிகழலாம் என அஞ்சிக்கொண்டிருப்பதாகவும், 50 விழுக்காட்டு குழந்தைகள் சாக விரும்புவதாகவும் புள்ளிவிவரங்களை எடுத்துரைத்து, இத்தகைய நிலைக்கு குழந்தைகளை தள்ளியதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

இதே கருத்தரங்கில் கலந்துகொண்டு தன் கருத்துக்களை முன்வைத்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேனாள் துணை அரசுத் தலைவர் Al Gore அவர்கள், இன்றைய உலகில் உலகம் வெப்பமயமாதல், பசுமை வாயு வெளிப்பாடுகள், அனைத்து விதமான காலநிலை மாற்றங்கள் என அனைத்தின் விளைவுகளையும் நாம் குழந்தைகளின் தோள்களில் சுமத்திவிட்டுச் செல்கிறோம் என கவலையை வெளியிட்டார்.

இக்கருத்தரங்கின் இறுதியில், இதில் கலந்துகொண்ட ஏனையத் தலைவர்களுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளின் உரிமைகள், அவர்களுக்கான அக்கறை, அவர்களின் பாதுகாப்பு என்பவைகளை உள்ளடக்கிய எட்டு இலட்சியங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 பிப்ரவரி 2025, 15:36