தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள் 

வாழ்க்கை என்னும் கொடையை மகிழ்வோடு வரவேற்போம்

வாழ்க்கை மற்றும் எல்லாவற்றையும் அழிக்கின்ற, வாழ்க்கையை வெறுப்பதற்கு மக்களைத் தூண்டுகின்ற போருக்கு இல்லை எனக் கூறுவோம். போர் எப்போதும் தோல்வியைத்தான் தரும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்க்கையைக் கொண்டு செல்லுதல், உலகத்திற்கான எதிர்நோக்கு என்ற கருப்பொருளில் இத்தாலியில் சிறப்பிக்கப்படும் வாழ்க்கைக்கான நாளில், வாழ்க்கை என்ற கொடையை மகிழ்வுடன் வரவேற்று, தன்னார்வ மனம் கொண்டு உழைக்கும் குடும்பங்களுக்கு நன்றி என்றும், குழந்தைகளை இவ்வுலகிற்குக் கொண்டு வர இளம்தம்பதிகள் அஞ்சவேண்டாம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்விற்கான இத்தாலிய இயக்கத்தின் 50 ஆண்டிற்காகத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

“அவர்களை அன்பு செய்வோம், பாதுகாப்போம்” என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த உச்சிமாநாடு பிப்ரவரி 3 திங்கள்கிழமையுடன் நிறைவிற்கு வர இருப்பதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், சிறியவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாக இம்மாநாடு இருக்கும் என்று கூறி அது வெற்றியடைய தன்னோடு இணைந்து செபிக்கவேண்டும் என்று திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மனித வாழ்க்கையின் முதன்மையானது மாண்பு, மதிப்பு, என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், வாழ்க்கையையும், எல்லாவற்றையும் அழிக்கின்ற, வாழ்க்கையை வெறுப்பதற்கு மக்களைத் தூண்டுகின்ற போருக்கு இல்லை எனக் கூறுவோம் என்றும், போர் எப்போதும் தோல்வியைத்தான் தரும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த யூபிலி ஆண்டில், தொடர்ந்து வரும் அனைத்து மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகளில் நமது அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ நம்பிக்கை ஆட்சியாளர்கள் இதற்காக தொடர்ந்து பல முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என மீண்டும் தனது வேண்டுகோளைப் புதுப்பிப்பதாக எடுத்துரைத்தார்.

அமைதிக்காக செபிப்போம் துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், மியான்மார், சூடான், தெற்கு கீவ் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 பிப்ரவரி 2025, 13:33