மனிதர்கள் மத்தியில் மனிதராக பிரசன்னமாகி இருக்கும் இயேசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துரைக்கின்றது என்றும், இதுவே இயேசுவின் புதுமை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான உலக நாளை முன்னிட்டு வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லூக்கா நற்செய்தியில் உள்ள இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் பகுதி குறித்தக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
வாழ்க்கை என்பது கடவுளிடமிருந்து வருகின்றது என்பதை நினைவூட்டுவதற்காகவும், இஸ்ரயேல் மக்கள் தொடக்கமுதல் செய்துவந்த பழக்கவழக்கங்களைத் திருக்குடும்பம் செய்து வந்தது என்பதை எடுத்துரைப்பதற்காகவும் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது நற்செய்தியில் விவரிக்கப்படுகின்றது என்றும், அப்போது இதுவரை நடக்காத ஒரு செயல் நடைபெறுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதியவர்களான சிமியோன் அன்னா இருவரும் இயேசுவைப்பற்றி இறைவாக்குரைத்து கடவுளைப் புகழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மீட்பிற்காகவும் கடவுளின் வருகைக்காகவும் காத்திருந்த மக்களுக்கு அவரைக் குறித்து எடுத்துரைக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உணர்வுப்பூர்வமான அவர்களின் குரலும், வார்த்தையும் அங்குள்ள ஆலயத்தின் பழைய கற்களுக்கு மத்தியில் அழகாக தெளிவாக எதிரொலித்தன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்தது நிறைவேறிற்று என்றும், கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை எடுத்துரைத்து இதுவே இயேசுவின் புதுமை என்றும் கூறினார்.
சிமியோன் மற்றும் அன்னாவின் முதுமைக் காலத்தில், உலக வரலாற்றை மாற்றும் புதுமை நிகழ்கிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மரியாவும் யோசேப்பும் இவர்களின் வார்த்தைகளைக் கேட்டு வியந்தார்கள் என்றும், குழந்தையைக் கையில் தாங்கிய சிமியோனும் அன்னாவும், இயேசுவை மீட்பர், ஒளி, எதிர்க்கப்படும் அடையாளம் என்னும் மூன்று பெயர்களில் அழைக்கின்றனர் என்றும் கூறினார்.
முதலில் இயேசுவே நமது மீட்பர்
"மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன" என்ற சிமியோனின் இறைவாக்கு இயேசுவை மீட்பர் என அறிக்கையிடுகின்றது என்றும், நம்மை வியப்பில் ஆழ்த்தும் இவ்வரிகள் உலகளாவிய மீட்பானது, இயேசு என்னும் ஒருவரில் குவிந்துள்ளது. ஏனெனில் இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இரண்டாவது இயேசுவே ஒளி
"இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி;" என்ற இறைவார்த்தைகள், எவ்வாறு சூரியன் இந்த உலகின்மேல் உதிக்கும்போது இருள் மறைந்து ஒளி உதயமாகிறதோ, அதுபோல, குழந்தையாகிய இயேசு என்னும் ஒளி, தீமை, துன்பம், மரணம் என்னும் இருளிலிருந்து நம்மை மீட்கின்றது என்றும், இத்தகைய ஒளியானது இக்காலத்தில் மிகவும் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை.
மூன்றாவதாக எதிர்க்கப்படும் அடையாளம்
"இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும்" என்ற இறைவார்த்தைகள், இயேசு வரலாற்றையும் அதன் கதைகளையும், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அன்பு என்னும் அளவுகோலால் வெளிப்படுத்துகின்றார் என்றும், அன்பு செய்பவர் வாழ்கின்றார், வெறுப்பவர் இறக்கின்றார் என்பதே அந்த அளவுகோல் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசுவே நமது மீட்பர், அவரே நம் ஒளி, எதிர்க்கப்படும் அடையாளம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எனது வாழ்க்கையில் நான் யாருக்காகக் காத்திருக்கின்றேன்? எனது மிகப்பெரிய எதிர்நோக்கு என்ன? எனது இதயம் கடவுளின் முகத்தைக் காண ஏங்குகின்றதா? மனிதகுலத்திற்கான அவருடைய மீட்புத் திட்டத்தின் வெளிப்பாட்டிற்காக நான் காத்திருக்கிறேனா? என்று சிந்தித்துப்பார்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இயேசுவை எப்போதும் சந்திக்கவும்,வரலாற்றின் நிழல்களில் நடக்கவும், எப்போது நமக்கு உறுதுணையாக இருக்க தூய அன்னை மரியாவிடம் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மூவேளை செபத்திற்குப் பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்