தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது

இன்றும் இலட்சக் கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை வறுமை, போர், பள்ளிக்குச் செல்ல இயலாமை, அநீதி சுரண்டல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகின்றது

மெரினா ராஜ் – வத்திக்கான்

வெடிகுண்டுகளுக்கு குழந்தைகள் பலியாவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், குழந்தையின் வாழ்க்கைக்கு முன்பு வேறு எதுவும் மதிப்பற்றது, குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 3 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் அவர்களை அன்பு செய்வோம், பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  குழந்தைகளுக்கான உரிமைகள் உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வளமை மிகுந்த உலக நாடுகள் கூட குழந்தைகளுக்கான அநீதியிலிருந்து விடுபடவில்லை என்றும் எடுத்துரைத்தார்.

இன்றும் இலட்சக் கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை வறுமை, போர், பள்ளிக்குச் செல்ல இயலாமை, அநீதி சுரண்டல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்றும், மிகவும் வறுமையான நாடுகள், போர் மற்றும் மோதல்களால் துன்புறும் நாடுகள் போன்றவற்றில் வாழும் சிறார் மற்றும் இளையோர் கடினமான சோதனைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்க்கையை தங்கள் முன்னால் வைத்திருப்பவர்கள் அதை நம்பிக்கையுடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் பார்க்கத் தவறிவிடுவது அதிகரித்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், சமூகத்தில் எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கும் இளையோர் அதனைத் தங்களுக்குள் அடையாளம் காண போராடுகின்றார்கள் என்றும், இது கவலையையும் துயரத்தையும் அளிக்கக்கூடியதாக் இருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் கனவுகள் நிறைவேறாததாகவும், கற்கும் கல்வி பலனளிக்காததாகவும், வேலைவாய்ப்பின்றி இருக்கும்போதும், நமது விருப்பங்கள் நிறைவேறாத ஒன்றாக இருக்கும்போதும்,  நிகழ்காலத்தை மனச்சோர்விலும் சலிப்பிலும் வாழ்வது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

போர்ச்சூழல் இல்லாத நாடுகளில் கூட, சிறார்களும் இளையோரும் குற்றமிழைக்கும் கும்பல்களுக்கு இடையிலான வன்முறையினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், போதைப்பொருள்களுக்கு அடிமையாகின்றார்கள் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இச்செயல்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறி, பெரும்பாலும் அவர்களை அனாதைகளாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஆக்குகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

வளர்ந்த நாடுகளின் மிகைப்படுத்தப்பட்ட தனித்துவமும், இளம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், சில நேரங்களில் அவர்களைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியவர்களால் அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் அல்லது அடக்கப்படுகிறார்கள் என்றும், சமூக அளவிலோ அல்லது மன அளவிலோ பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

பல குழந்தைகள் கடலில், பாலைவனத்தில் அல்லது புதிய வாழ்வை  எதிர்நோக்கிய பயணங்களின் போது இறக்கின்றனர் என்றும்,  இன்னும் பலர் கவனிப்பின்றி, பல்வேறு வகையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

சமத்துவமற்றப் பொருளாதாரம், போர் வன்முறைகள், மருத்துவ வசதியின்மை, பள்ளிக்கல்வியறிவின்மை போன்றவற்றால் குழந்தைப்பருவம் மறுக்கப்பட்ட ஒன்றாக இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், இதனை எதிர்த்துக் கண்டிப்பது அமைதிக்கான ஒரு கூக்குரலாக அமையும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

செவிசாய்த்தல் மிக முக்கியம், சிறு குழந்தைகள் கவனிக்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், நினைவில் கொள்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும் என்றும், அவர்கள் தங்களது பார்வையாலும் அமைதியாலும் நம்மிடம் பேசுகிறார்கள், நாம் அவர்களுக்கு செவிசாய்ப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 பிப்ரவரி 2025, 13:24