தேடுதல்

பிப்ரவரி மாதத்திற்கான திருத்தந்தையின் செபவேண்டல் கருத்து

திருத்தந்தை : இன்றும் இறைவன் இளையோரை அழைத்துக் கொண்டேயிருக்கிறார், சில வேளைகளில் நாம் கற்பனைச் செய்துகூடப் பார்க்க முடியாத வகையில் அந்த அழைப்பு உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அருள்பணித்துவம் மற்றும் துறவு வாழ்வுக்கான தேவ அழைத்தல்கள் பெருக இறைவனை நோக்கி சிறப்பான விதத்தில் செபிப்போம் என பிப்ரவரி மாதத்திற்கான செபக்கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி மாதத்திற்கான தன் செபவேண்டல் கருத்தை பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 17வது வயதில் நடந்த ஓர் அனுபவத்துடன் தன் செய்தியைத் துவக்கியுள்ளார்.

தான் 17வது வயதில் படித்துக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருந்தபோது, தனக்கென்று சில திட்டங்கள் இருந்ததாகவும், அதில் தான் ஓர் அருள்பணியாளராக வேண்டும் என ஒரு நாளும் சிந்தித்துப் பார்த்ததில்லை எனவும் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய ஒரு பின்னணியுடன் தான் ஒரு நாள் கோவிலுக்குச் சென்றதாகவும் கடவுள் தனக்காக அங்கு காத்திருந்ததைக் கண்டதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

இன்றும் இறைவன் இளையோரை அழைத்துக் கொண்டேயிருக்கிறார், சில வேளைகளில் நாம் கற்பனைச் செய்துகூடப் பார்க்க முடியாத வகையில் அந்த அழைப்பு உள்ளது என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, சிலவேளைகளில் நாம் அவரின் அழைப்புக்கு செவிமடுப்பதில்லை, ஏனெனில் நாம் நம் விடயங்களிலும், நம் திட்டங்களிலும், திருஅவைக்குள்ளான நம் சொந்த விடயங்களிலும் மூழ்கிப்போய் விடுகிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தூய ஆவியார் கனவுகள் வழியாக நம்மிடம் உரையாடுவதோடு, இளையோர் தங்கள் இதயங்களில் உணரும் அக்கறை வழியாகவும் பேசுகிறார் என்றுரைக்கும் திருத்தந்தையின் செபக்கருத்து, நாம் இளையோரின் பயணத்தில் உடன் நடந்தால் கடவுள் எவ்வாறு அவர்கள் வழியாக புதியவைகளை ஆற்றுகிறார் என்பதை அறிந்துகொள்வதோடு, திருஅவைக்கும் இவ்வுலகுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றுவதற்கான வழிகளில் அவரின் அழைப்பை நம்மால் வரவேற்க முடியும் என மேலும் கூறியுள்ளார்.

நாம் இளையோரில் நம்பிக்கைக் கொள்வோம். அனைத்திற்கும் மேலாக, கடவுளில் நம்பிக்கைக் கொள்வோம், ஏனெனில் அவர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் என தன் செய்தியின் இறுதியில் கூறும் திருத்தந்தை, அருள்பணி வாழ்வு அல்லது, துறவு வாழ்வு வழியாக இயேசுவின் மறைப்பணி வாழ்வுக்கு அழைக்கப்பட்டோரின் விருப்பங்களையும் சந்தேகங்களையும் திருஅவை சமூகம் வரவேற்று வழிநடத்தவேண்டும் என செபிப்போம் என அதனை நிறைவுச் செய்துள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 பிப்ரவரி 2025, 15:41