தேடுதல்

நேப்பிள்ஸ் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள்  (VATICAN MEDIA Divisione Foto)

திருத்தந்தை : மனிதருக்கு சேவை புரியும் அறிவியலே நமக்கு உகந்தது

அக்கால மருத்துவர்கள் பின்பற்றிவந்த, ‘காயப்படுத்தாதே’, ‘நன்முறையில் பராமரி', ‘குணப்படுத்து' என்ற மூன்று கொள்கைகளின் வழி இக்கால மருத்துவப்பணி தொடர வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் மிகத் தொன்மை பல்கலைக்கழகங்களுள் ஒன்றான இத்தாலியின் நேப்பிள்ஸ் நகர் இரண்டாம் பிரெடரிக் பல்கலைக்கழக மாணவர்களை நவம்பர் 29, வெள்ளிக்கிழமையன்று சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பேரரசர் இரண்டாம் பெடரிக்கால் துவக்கப்பட்ட நேப்பிள்ஸ் பல்கலைக்கழகம் தன் 800ஆம் ஆண்டைச் சிறப்பிப்பதை முன்னிட்டு, அப்பல்கலைக்கழகத்தின் பல் பிரிவு மாணவப்பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை, அக்கால மருத்துவர்கள் பின்பற்றிவந்த, ‘காயப்படுத்தாதே’, ‘நன்முறையில் பராமரி', ‘குணப்படுத்து' என்ற மூன்று கொள்கைகளின் வழியில் இந்த பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவது குறித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வெளியிட்டார்.

தீங்கிழைக்காதே என்ற பதம், ஏற்கனவே நோயால் வாடிக்கொண்டிருக்கும் நபரின் துன்பத்தைப் பெருக்காதே என்பதை குறிப்பதோடு, நன் முறையில் பராமரி என்பது நல்ல சமாரியனின் செயல் எனவும், கடவுளின் வழியில் நெருக்கத்தோடும், கருணையுடனும், கனிவுடனும் ஒவ்வொரு நோயாளியும் முழு அளவில் பராமரிக்கப்படவேண்டும் என்பதை குறிக்கிறது எனவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குணப்படுத்தல் என்னும்போது மருத்துவர்கள் நோயாளிகளின் அனைத்துவிதமான நோய்களையும் குறைபாடுகளையும் இயேசுவைப்போல் குணப்படுத்தி, அவர்களுக்கு நன்மை புரிவதில் தங்கள் மகிழ்ச்சியைக் காணவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி எந்த சூழலிலும் மனித மாண்பை தூர விலக்கிவைக்கக் கூடாது, அவ்வாறு விலக்கி வைக்கப்பட்டால் அது மருத்துவத்தை வியாபாரப்பொருளாக மாற்றிவிடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

தீமையினின்று குணப்படுத்தவே மருத்துவத்தொழில் உள்ளது, எந்த உயிரும் விலக்கிவைக்கப்பட முடியாதது, மனிதருக்கு சேவை புரியும் அறிவியலே நமக்கு உகந்தது என மேலும் மருத்துவ மாணவ பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2024, 15:42