ஈரான் அரசுத்தலைவர் உடன் தொலைபேசியில் உரையாடிய திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
நவம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடன் தொலைபேசியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாடியதாகவும், காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான திருத்தந்தையின் அழைப்பை அவர் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேலில் போரினால் பல மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ள கடுமையான சூழல் குறித்து கடவுளின் பெயரால் கேட்கின்றேன் போரை நிறுத்துங்கள் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த உரையாடல் நடைபெற்றதாகவும் கூறினார் புரூனி.
மத்திய கிழக்கில் அமைதியை நீடிக்க, அண்மைய நாள்களில் திருத்தந்தை அவர்கள் பல நாட்டின் தலைவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த புரூனி அவர்கள், நவம்பர் 2 அன்று பாலஸ்தீனிய அரசுத்தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன், அக்டோபர் 26 அன்று துருக்கிய அரசுத்தலைவர் ரெசெப் தையிப் எர்டோகனுடன், அக்டோபர் 22 அன்று அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பிடனுடன் தொலைபேசியில் உரையாடியதையும் எடுத்துக் கூறினார்.
இந்த உரையாடல்களில் அமைதிக்கான பாதைகளைக் கண்டறிவதன் அவசியம், புனித பூமி எருசலேம் பாதுகாப்பு ஆகியவை வலியுறுத்தப்பட்டதாகவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான தீர்வை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.
கடந்த அக்டோபர் 30 அன்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் Hossein Amir-Abdollahian ஆகியோருக்கும் இடையே ஈரானிய வேண்டுகோளின் பேரில் ஒரு தொலைபேசி உரையாடல் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார் மத்தேயோ புரூனி.
இந்த உரையாடலில், பேராயர் காலகர் அவர்கள், "இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பதில் திருஅவை மிகத் தீவிரமாக தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மோதலை விரிவுபடுத்துவதைத் தவிர்க்கவும், நிலையான அமைதியை இரு நாடுகளும் எட்டுவதற்கான முழுமையான தேவையை வலியுறுத்தியுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்