தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்  உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் உறுப்பினர்களுடன்  (Vatican Media)

முறைகேடுகளால் பாதிக்கப்படுவோருக்குப் பாதுகாப்பளிப்பது முக்கியம்

முறைகேடுகள் விடயத்தில் அமைதி காப்பதையோ மறைப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாதுகாப்பு செவிமடுத்தல், பராமரித்தல் என்னும் மூன்று வழிகளில் பாலியல், அதிகாரம், மனநலன் போன்றவற்றின் முறைகேடுகளால் பாதிக்கப்படும் சிறாருக்குப் பாதுகாப்பளிப்பது முக்கியம் என்றும், இவ சரியாக நடக்க நமது மனமாற்றமும் நமது குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனமும் அவசியம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 18 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சிறார் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கான இத்தாலிய முதல் தேசிய மாநாட்டிற்கான உறுப்பினர்கள் ஏறக்குறைய 400 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,(எரே 30:17). என்ற கருப்பொருளுக்கேற்ப எரேமியா இறைவாக்கினரின் வார்த்தையால் வழி நடத்தப்பட நம்மைக் கையளிக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரின் துன்பங்களையும் ஆழமான காயங்களையும் குணப்படுத்த இறைவன் தயாராக இருக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாதுகாத்தல்

காயமடைந்தவர்களின் துன்பத்தில் துணிவுடன் பங்கேற்கவும், சிறார் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பிற்கு முழு சமூகமும் பொறுப்பு என்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முழு கிறிஸ்தவ சமூகமும், அதன் திறன்கள் மற்றும் முழுமையின் செழுமையில், ஈடுபட வேண்டும், ஏனென்றால் பாதுகாப்பின் செயல் கடவுளின் அரசைக் கட்டியெழுப்புவதில் திருஅவை பணியின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் எடுத்துரைத்தார்.

பாதுகாப்பு என்பது எளிய மற்றும் மிகவும் பாதுகாப்பற்றவர்களுக்கு ஆதரவாக ஒருவரின் இதயம், பார்வை துல்லியமாகப் பணியாற்றுவதைக் குறிக்கிறது என்று கூறிய திருத்தந்தை நீதி, உண்மை, மனம், மற்றும் சமூகப் புதுப்பித்தலுக்குத் தேவையான பாதை என்றும் கூறினார்.

முறைகேடுகள் விடயத்தில் அமைதி காப்பதையோ மறைப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை, திருஅவை சமூகத்திற்குள் உண்மையைக் கண்டறிதல், நீதியை மீண்டும் நிலைநாட்டுதல் மிக முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு என்பது தீங்கு விளைவிக்கும் சந்தர்ப்பங்களைத் தடுத்தல், மிகவும் பலவீனமானவர்களின் பாதுகாப்பில் உணர்திறன் மற்றும் கவனத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட நிலையான பயிற்சி நடவடிக்கைகள் வழியாக மட்டுமே சாத்தியமாகும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

செவிமடுத்தல்

செவிமடுத்தல் என்பது இதயத்தின் ஒரு இயக்கம், துன்பப்பட்டவர்கள் அல்லது துன்பப்படுபவர்கள், மிகவும் பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை நமது பணிகளில் மையத்தில் வைப்பதற்கான ஒரு அடிப்படை விருப்பம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு செவிமடுப்பது என்பது தடுப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான அவசியமான படி என்றும் வலியுறுத்தினார்.

முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் தனிப்பட்ட மற்றும் சமூக புதுப்பித்தலுக்கு சவாலாகவும் செவிமடுத்தல் விளங்குகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், விழிப்புணர்வு, நம்பிக்கை போன்ற பண்புகள் நம்மில் வளர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் ஓரு நெருக்கத்தை செவிமடுத்தல் ஏற்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குணப்படுத்துதல்

செவிமடுத்தல் பாதுகாத்தல் போன்ற பாதையைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே குணப்படுத்துதல் பணியினைச் செய்ய முடியும் என்றும், தூக்கி எறியப்படும் கலாச்சாரத்தில் வாழும் நமக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமான உள்ளுணர்வைத் தருவதாக குணப்படுத்தல் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கடந்த கால தவறுகளைக் களைந்து புதிய பாதைகளைத் திறக்கும் பணி, காயங்களை "குணப்படுத்தும் பணி, நீதியின் பணி என்று குணப்படுத்துதலை வரையறுத்த திருத்தந்தை அவர்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்,அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2023, 10:51