தேடுதல்

யூத மத இரபீக்கள் பேரவை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ். யூத மத இரபீக்கள் பேரவை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்.   (Vatican Media)

கிறிஸ்தவர்களைப் புரிந்துகொள்ள யூத மதம் தேவை

போர் மற்றும் மோதல்களால் சூழப்பட்ட இந்நேரத்தில் நம்பிக்கையுள்ள மக்களாகிய நாம் அனைவரும், மனித உடன்பிறந்த உறவைக் கட்டியெழுப்பவும், நல்லிணக்கத்தின் வழிகளைத் திறக்கவும் அழைக்கப்படுகிறோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

யூத மதத்துடனான உரையாடல் கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இயேசு ஒரு யூதராகப் பிறந்து வாழ்ந்தார் என்றும் கிறிஸ்தவத்திற்குள் யூத பாரம்பரியத்தின் அடிப்படை வேர் அமைந்துள்ளது, கிறிஸ்தவர்களைப் புரிந்துகொள்ள யூத மதம் தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

நவம்பர் 6 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் ஐரோப்பிய யூத மத இரபீக்கள் பேரவையின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதம், போர், வன்முறை அல்ல மாறாக இரக்கம், நீதி, உரையாடல் போன்றவைகளே, அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான சரியான வழிமுறைகள் என்றும் கூறினார்.

யூத-கிறிஸ்துவ உரையாடல்களில் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பிரச்சினைகளைக் குறித்து தொடர்ந்து உரையாடும் நேரத்தில், இறையியல் பரிமாணத்தை உயிருடன் வைத்திருப்பது முக்கியம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், யூத கிறிஸ்தவத்திற்கு இடையிலான உரையாடல், மதங்களுக்கு இடையிலான உரையாடல் அல்ல மாறாக குடும்ப உரையாடல் என்றும் எடுத்துரைத்தார்.

ஒரே கடவுளுக்கு முன்பாக நாம் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டுள்ளோம் என்றும், நமது உரையாடலால் அவருடைய வார்த்தைக்கும், செயல்பாடுகளால் அவருடைய அமைதிக்கும் சான்றுகளாக இருக்க நாம் ஒன்றாக அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர் மற்றும் மோதல்களால் சூழப்பட்ட இந்நேரத்தில் நம்பிக்கையுள்ள மக்களாகிய நாம் அனைவரும், எல்லாவற்றிற்கும் மேலாக, மனித உடன்பிறந்த உறவைக் கட்டியெழுப்பவும், நல்லிணக்கத்தின் வழிகளைத் திறக்கவும் அழைக்கப்படுகிறோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"உரையாடல்" என்ற வார்த்தையின் பொருள் "வார்த்தைகளைக் கடந்து செல்லுதல் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு, என் பாதைக்கு ஒளியும் அதுவே“ என்ற திருப்பாடல் வரிகள், அறிவற்ற போர், வன்முறை, வெறுப்பு போன்றவற்றை அல்ல மாறாக மற்றவர்களை நோக்கிச்செல்லுதல், ஏற்றுக்கொள்ளுதல், பொறுமையோடிருத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த உதவுகின்றது என்றும் கூறினார்.

நம்பிக்கையாளர்களாகிய நாம் அனைவரும் உரையாடலின் சான்றுகளாகத் திகழ்வது மிக முக்கியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்தல், உரையாடல், செவிமடுத்தல், மனித உடன்பிறந்த உறவுப்பரிமாற்றம் போன்றவற்றின் வழியாக இறைவார்த்தையின் பணியாளர்களாகவும், சீடர்களாகவும் நம்மை அங்கீகரிப்பதன் வழியாக  நாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி விடுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.  

அமைதி மற்றும் உரையாடலை உருவாக்குபவர்களாக நாம் அழைக்கப்படுகின்றோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது சொந்த பலம் மற்றும் திறன்களால் மட்டுமல்ல எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் இத்தகைய வாழ்க்கை வாழ அழைக்கப்படுகின்றோம் என்று கூறி, ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும் என்ற ( தி.பா. 127.1) திருப்பாடல் வரிகளையும் மேற்கோள்காட்டினார்.

வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்ற எரேமியாவின் வாக்கிற்கிணங்க வாழ நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2023, 13:28