வத்திக்கான் பொருளாதாரத் துறையினரைச் சந்தித்தார் திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பொருளாதாரத்திற்கான திருப்பீடத்துறை செயலகத்தின் சீர்திருத்தத்தை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் மற்றும் சவால்களை வலியுறுத்தி, அத்துறையின் தலைவர் Maximino Caballero Ledo மற்றும் அதன் பணியாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 13, இத்திங்களன்று, பொருளாதாரத்திற்கான திருப்பீடத்துறை செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் வரவேற்று அவர்களோடு உரையாடினார்.
முன்னதாக ஒரு சிறிய தொடக்கவுரை வழங்கிய இத்துறையின் தலைவர் Caballero அவர்கள், நம்முடையது ஒரு இளம் நிறுவனம், பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தொடக்கத்துடன் பிறந்தது; உரோமைத் தலைமைச் செயலகத்தின் சீர்திருத்தம் முழுவதுமாக நம்மிடம் ஒப்படைக்க விரும்பிய பொறுப்பின் முற்போக்கான வரையறைக்குத் தேவையான பல்வேறு கட்டமைப்புகளை இத்துறை தழுவியுள்ளது என்றும் உரைத்தார்.
பொருளாதாரத்திற்கான நமது செயலகமானது, ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையின் தேவைகளுக்கு இடையேயான சமநிலைக்கான நிலையானத் தேடலில் சீர்திருத்தத்தின் முன்னேற்றத்தை ஆதரிக்க முயல்கிறது என்று வலியுறுத்திக் கூறிய Caballero அவர்கள், நிர்வாகத்தில் சுறுசுறுப்பு, உரோமை ஆயரான திருத்தந்தை மற்றும் அவருக்கு உதவும் தலத்திருஅவைகளின் பணியை நிறைவேற்றுவதற்கு நமது சரியான பங்களிப்பு அவசியம் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
அண்மைய ஆண்டுகளில் பொருளாதாரத்திற்கான செயலகம் கவனம் செலுத்திய முக்கிய சீர்திருத்தங்களை விளக்கிய Caballero அவர்கள், பொருளாதாரத்திற்கான செயலகத்தின் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களின் பங்களிப்பால்தான் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சாத்தியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அன்றாடப் பணிகளில் தொடர்ந்து முன்னேற ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பதால், உண்மையான மற்றும் தாராளமான வழிகளில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார் Caballero.
அதேநேரத்தில், ஏற்கனவே நிறுவப்பட்ட புதிய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் திருப்பீடத்தின் சொத்துக்களின் எதிர்கால நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு துறைகளில் இன்னும் நிறைய பணிகள் ஆற்றவேண்டியுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டினார் Caballero.
மேலும் இன்னும் முடிக்கப்படாத பல்வேறு பணிகளில், அவற்றைத் திறம்பட முடிக்கும் பொருட்டு அப்பாதையில் இன்னும் விரைந்து முன்னேற திருத்தந்தையின் பேராதரவு நமக்குத் தேவை என்று கூறிய Caballero அவர்கள், இப்பொருளாதாரச் செயலகத்தின் அனைத்துப் பணிகளிலும் திருத்தந்தை காட்டிவரும் உடனிருப்பிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இச்சந்திப்புக்காக வந்திருந்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துச் சொல்வதற்கு முன்னதாக, வெளிப்படைத்தன்மை மற்றும் மேற்பார்வை, மற்றும் பெருகிய முறையில் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பயனுள்ள நடைமுறைகளை அடையாளம் காண்பது ஆகிய இரண்டிலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பாதையில் தொடருமாறு அவர்களுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
வத்திக்கானின் பொருளாதாரம், நிதி, நிர்வாகம், கணினி மற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்யும் துறையில் பொருளாதாரத்திற்கான திருப்பீடத்துறை செயலகம் செயலாற்றி வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்